பேச அனுமதிக்காமல் நேரத்தை குறைக்கிறார்கள்; அ.தி.மு.க., ம.தி.மு.க. வெளிநடப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க.வுக்கு பேச வேண்டிய நேரத்தை குறைக்கிறார்களென்று கூறி அ.தி.மு.க., ம.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் செ.மா. வேலுச்சாமி பேச தொடங்கும்போது, சபாநாயகர் குறுக்கீட்டு, உங்களுக்கு பேச ஒதுக்கப்பட்ட நேரம் 25 நிமிடம் என்றார். இதை தொடர்ந்து செ.மா. வேலுச்சாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. நாடு முழுவதும் போலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. போலி டீத்தூள், போலி ரேசன் கார்டு, போலி மருந்து, போலி போலீஸ் என உள்ளது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக்கொண்டுள்ளது. வெங்காய விலை உங்கள் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது. அமைச்சர் எ.வ. வேலு:- வெங்காயத்தை வைத்து ஆட்சி மாற்றம் வரும் என நினைக்கிறீர்கள். வெங்காய விலை இப்போது சரிந்து விட்டது. கிலோ 10 ரூபாய்க்கு நான் வாங்கித்தரவா? செ.மா. வேலுச்சாமி:- நீங்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் புரட்சித்தலைவியின் திட்டங்களை மிஞ்ச முடியாது. இலவச காங்கிரீட் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்கிறீர்கள். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிக்க ரூ.2 லட்சம் ஆகிறது. எனவே இது மக்களை கடனாளியாக்கும் திட்டமாக ஆகி விட்டது. அமைச்சர் பொன்முடி:- 2001-ல் அ.தி.மு.க. ஆட்சி கவர்னர் உரையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தை அறிவித்தீர்கள். இதுவரை எத்தனை வீடு கட்டிக் கொடுத்தீர்கள். விவரம் கூறத் தயாரா? செ.மா வேலுச்சாமி:- நான் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லி விட்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் சம்பவங்களை அடுக்கடுக்காக சொல்லி பட்டியலிட்டார். (அவர் பேசி கொண்டிருக்கும் போதே 25 நிமிடம் ஆகிவிட்டதால் சபாநாயகர் அடுத்து பேச வேண்டிய தி.மு.க. உறுப்பினரான அப்பாவுவை பேச அழைத்தார்.) இதன் பிறகு செ.மா. வேலுச்சாமி பேச மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. உடனே ஓ. பன்னீர் செல்வம் (அ.தி.மு.க.) எழுந்து செ.மா. வேலுச்சாமி தொடர்ந்து பேச அனுமதிக்குமாறு கேட்டார். ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்ட 25 நிமிட நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் கூறினார். இதை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் வெளியே வந்த செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டமன்ற ஆய்வுக்குழு வில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 35 நிமிடத்திற்கு பதில் 25 நிமிடமே பேச அனுமதி தந்துள்ளார்கள். மக்கள் விரோத செயல்களை சுட்டிக்காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் அ.தி.மு.க.வுக்கு பேச வேண்டிய நேரத்தை குறைக்கிறார்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.