சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்த்தவர் சாய்பாபா; கருணாநிதி இரங்கல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப். 24- சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்த்தவர் சாய்பாபா என்று புகழாரம் கூறி முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- நமது அன்பிற்கும் பாசத்துக்கும் உரிய புட்டபர்த்தி அருள்திரு சத்ய சாய்பாபா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் துன்புறுகிறேன். இறுதி அஞ்சலி செலுத்திட நமது துணை முதலமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின் இன்று சென்றுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிட சில மாநில அரசுகளே மறுத்த நிலையிலே கூட நான் கேட்காமலே தானாகவே என் இல்லத்துக்கே வருகை தந்து சென்னைக்குக் குடிநீர் கிடைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் உதவி செய்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் தக்கதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள். நான் ஒரு நாத்திகவாதி என்ற போதிலும், சிறந்த ஆத்திக வாதியான பாபா அவர்கள் என்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். 2007-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையிலே நடைபெற்ற போது, அவரைப் பற்றி நான் பேசும்போது, மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவை என்றும் அதாவது மக்கள் நலப் பணிக்காக அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஒன்று சேர்வதில் தவறில்லை என்றும் கூறினேன். இவ்வளவு விரைவில் அவர் நம்மையெல்லாம் விட்டு மறைந்து விடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. அவரது மறைவால் வருந்தும் எண்ணற்ற அவருடைய சீடர்களின் துயரத்தில் நானும் பங்கேற்பதோடு, என்னுடைய தனிப்பட்ட ஆழ்ந்த இரங்கலையும் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி இரங்கல் செய்தியில் கூறி உள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.