குற்றபத்திரிகையில் கனிமொழி: கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, ஏப்.26 - 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சி.பி.ஐ. குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள, கருணாநிதியின் மகள் கனிமொழியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கலைஞர் டி.வி. உரிமத்தை ரத்து செய்து அதன் ஒளிபரப்பை தடை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய திகைப்nullட்டும் பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்தத் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கலைஞர் டி.வி.யின் 60 விழுக்காடு பங்குகளை கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 விழுக்காடு பங்குகள் கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது. சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும், கனிமொழியையும் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தது. அப்பொழுதிலிருந்தே, மத்திய புலனாய்வுத் துறையின் குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியின் பெயர்கள் இடம் பெறும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது. இந்த வகையில், இன்று மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இருப்பதில் எவ்வித வியப்பும் இல்லை. இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம். இந்தச் சூழ்நிலையில், சில பிரச்சினைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்வது பொருத்தமாக இருக்கும். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு வெறும் 20 விழுக்காடு பங்கு மட்டும் இருக்கையில், தயாளு அம்மாளுக்கு ஏன் 60 விழுக்காடு பங்கு? இதற்குக் காரணம், தனிப்பட்ட முறையில் அவர்கள் இந்த பங்குகளை வைத்திருக்கவில்லை. கனிமொழி, தனக்கும், தனது தாயார் ராஜாத்திக்கும் சேர்த்து 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், இருவருக்கும் இதில் சம பங்கு உண்டு. இதே போன்று, தயாளு அம்மாள் வைத்திருக்கும் 60 விழுக்காடு பங்கில் தயாளு அம்மாளை தவிர, அவரது கணவர் மு. கருணாநிதி, அவருடைய மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு மற்றும் மகள் மு.க. செல்வி ஆகியோருக்கும் சம பங்குகள் உண்டு. தனக்கு எந்தவித பயனும் இல்லாத, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாக, லஞ்சமாக, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல், இந்த பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்க மாட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சினை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்; அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உட்பட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். அப்பொழுது தான் அனைத்து ஊழல்களின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணை நியாயமான முடிவினை சென்றடையும். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி இருக்கிறார் என்பதை மத்திய புலனாய்வுத் துறை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.