போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மே.13- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஜெயலலிதா வீட்டு முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். காலை 9 மணி முதல் இனிப்புகள் வழங்கி தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்து விண்ணில் சென்று வெடித்து சிதறும் விலை உயர்ந்த பட்டாசு பாக்கெட்டுகள் எடுத்து வரப்பட்டு வெடிக்கப்பட்டன. மகளிர் அணியினர் அம்மா வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்கிற கோஷங்களை எழுப்பியபடி குத்தாட்டம் போட்டனர். நேரம் செல்லச்செல்ல ஜெயலலிதா வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் மிகவும் திணறினார்கள். இந்த வெற்றி கொண்டாட்டத்தை இந்திய டி.வி. சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. போயஸ் கார்டனுக்கு வந்த அனைத்து தொண்டர்கள் கையில் இனிப்பு பட்டாசுகளுடன் வந்தார்கள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டு அருகே வசிக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட் டன. மதியம் 12 மணி அளவில் ஜெயலலிதா வீட்டிற்கு செல்லும் தெரு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களின் தலையாகவே காட்சி அளித்தது. அந்த தெரு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தபடியே இருந்தனர். கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமா னதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும் ஜெயலலிதா வீட்டு முன்பு குவியத் தொடங்கினர். தேனாம் பேட்டை உதவி கமிஷனர் ரங்கராஜன் காலை 9.30 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார். அதனை தொடர்ந்து மயிலாப்பூர் துணை கமிஷனர் ராஜேந்திரன், தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், தென் சென்னை இணை கமிஷனர் பெரியய்யா, போக்குவரத்து இணை கமிஷனர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் ஜெயலலிதா வீட்டுக்கு வந்தனர். உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டிருந்தனர். வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் ஆகியவற்றின் பிரசாதங்களை கோவில் குருக்கள் எடுத்து வந்திருந்தனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டுக்குள் எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வந்து ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஜெயலலிதா வீட்டு முன்பு கூட்டணி கட்சி தொண்டர்களும் திரண்டனர். அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தலைமை செயலகத்தின் பின்னணியில் ஜெயலலிதா இருப்பது போன்ற பிரமாண்ட பேனர் ஒன்றை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினார். திரைப்பட உதவி இயக்குனர்கள் சார்பிலும் ஜெயலலிதா வீட்டு முன்பு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தை மீட்டெடுத்த தங்கத்தலைவியே, திரையரங்குகளை மீட்டு உதவி இயக்குனர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன், வக்கீல் இன்பத்துரை, டாக்டர் வெங்கடேசன், நடிகர்கள் ஆனந்தராஜ், குண்டு கல்யாணம் ஆகியோரும் ஜெயலலிதா வீட்டில் திரண்டிருந்தனர். கவிஞர் விரை கறீம், தலைமைக்கழக பேச்சாளர் சிட்கோ சீனு உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கினர். மயிலாப்பூரில் மயிலை ராஜேஷ்கண்ணா தலைமை யில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் மாணவர் அணி நீலகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மகாகவி பாரதிநகரில் முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஏ.என். சுப்பிரமணி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார். சின்னதம்பி, சக்திவேல் போட்டோ சேகர், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.