ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் 30 லட்சம் பெண்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவனந்தபுரம்,பிப்.20- ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் நேற்று 30 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கூடி பொங்கல் வைத்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பிரசித்தி பெற்றது. பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டின் திருவிழா, கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது. இன்று நள்ளிரவு குருதி பூஜையுடன் விழா நிறைவடைகிறது. 9-ம் திருநாளான நேற்று, விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை முதலே, வெளியூர்களை சேர்ந்த பெண்கள், கோவில் அருகில் பொங்கல் அடுப்புகளுக்கான இடங்களை பிடித்து விட்டு தங்கியிருந்தனர். அதிகாலை 4 1/2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10.45 மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில், துணை மேல் சாந்தி தீ மூட்டினார். அதைத் தொடர்ந்து, தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புகளில் பெண்கள் தீ மூட்டினர். ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவில் வளாகம், சுற்றுப்புறம் மற்றும் திருவனந்தபுரம் நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த லட்சக் கணக்கான அடுப்புகளில் தீப்பற்ற வைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான அடுப்புகளில் பொங்கலிட்டது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் தொடங்கிய அடுப்புகளின் வரிசை 8 கிலோ மீட்டர் தூரம் வியாபித்து காணப்பட்டது. 30 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கூடி பொங்கல் வைத்தனர். சர்க்கரை பொங்கல், வெண் பொங்கலுடன் பாயசம், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளையும் தயாரித்து அம்மனை வேண்டி வணங்கினர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டதால் திருவனந்தபுரம் நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த பொங்கல் வழிபாட்டில், பிரபல நடிகைகள் கே.பி.ஏ.சி.லலிதா, மேனகா, கல்பனா, சிப்பி, கார்த்திகா, மத்திய மந்திரி வேணுகோபாலின் மனைவி ஆஷா, அவர்களது மகள் பார்வதி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தாய் உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏராளமான வெளிநாட்டு பெண்களும் பொங்கல் வைத்தனர். பிற்பகல் 2.30 மணிக்கு உச்சபூஜையை தொடர்ந்து, பொங்கல் நைவேத்தியம் நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மந்திரங்கள் ஓதி, பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளித்தனர். பின்னர் பக்தர்கள் தங்கள் பொங்கல் பிரசாத பானைகளுடன் ரெயில், பஸ், வேன், கார், இரு சக்கர வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்றனர். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் மற்றும் ரெயில்களில் கூட்டம் அலை மோதியது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.