மதுரை மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மீனாட்சி தேரோட்டம் நடந்தது. அலங்கார தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம் ஆகியவை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வடக்கு ஆடி வீதியில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆடி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக அதிகாலையிலேயே தேரோட்ட ஏற்பாடுகள் நடந்தன. கீழமாசி வீதிகளில் உள்ள தேரடிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். அங்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் விசேஷ ஆராதனைகள் நடந்தன. இதன் பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினார்கள். பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் விசேஷ அலங்காரத்தில் வீற்றிருந்தனர். இதற்கு அடுத்த தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகரும், சுப்பிரமணியரும் வந்தனர். தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பணசுவாமி கோவிலில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இதன் பிறகு கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காலை 6.10 மணிக்கு பெரிய தேர் புறப்பட்டது. அதை தொடர்ந்து 6.35 மணிக்கு சிறிய தேர் புறப்பட்டது. தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை, ஒட்டகங்கள் முன்னே சென்றன. இவற்றை தொடர்ந்து சிறிய சப்பரங்கள் சென்றன. முதலில் விநாயகரும், இரண்டாவதாக முருகனும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்திருந்த சப்பரங்கள் சென்றன. இதையடுத்து பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், மற்ற தேரில் மீனாட்சியும் வந்தனர். இறுதியாக சண்டிகேசுவரர் சப்பரம் வந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வந்த தேர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் ப இடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் அரசு டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவும், அதன் பின்னால் தீயணைப்பு வண்டியும் வந்தது. தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். அவர்களுக்கு உதவியாக போலீசாரும், இளைஞர்களும் கைகோர்த்தபடி வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தியபடியே வந்தனர். தேரோட்டத்தை காண வந்திருந்த பக்தர்கள் சம்போ சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தரேஸ்வரா, ஹரிஹர சுந்தரேஸ்வரா என்று பக்தி கோஷம் முழங்கியபடியே தேரை இழுத்தனர். தேருக்கு முன்புறமும், பின்புறமும் சாலைகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனையும், சுவாமியையும் தரிசித்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மிதந்து வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. இதன் பின் மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி சந்திப்பில் தேர் வந்தடைந்தது. அங்கு தேர் திரும்பிய போது சந்திப்பில் கடலென திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் தேர் அலங்காரமாக காட்சியளித்தது. பிறகு தெற்குமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழிகாய தேர் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. அப்போதும் பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள். தேரோட்டத்தின் போது பல இடங்களில் பக்தர்களுக்காக சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. தேரோட்டத்தையொட்டி மதுரையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்களும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக பல இடங்களில் நீர்மோர், குளிர்பானங்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டன. தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.