கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று பெருமை பெற்றதாகும். இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 1ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர். மீனாட்சிஅம்மன் கோவில் திருவிழாவில் 8ந் தேதி பட்டாபிஷேகமும், 9ந்தேதி திக் விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து 12ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதைப்போன்று அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் (ஏப்ரல்) 29ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் விழா ஆரம்பமானது. அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (12ந் தேதி) மாலை 6 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டுஉடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணிக்கு மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வருகை தந்தார். அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள், வர்ணித்து பாட்டுப்பாடி, ஆட்டம்ஆடி, அதிர் வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கே நடந்த எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட் போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கே பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். இன்று காலை 6 மணிமுதல் 6.30 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகினார். அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள். அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கியதை பக்தர்தகள் வழிபட்டனர். வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.