முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்பு இன்று தொடங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகளும் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளன. இதில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள், 100 பி.டி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. சென்னை மருத்துவ கல்லூரி (எம்.எம்.சி.), கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் புதிய மாணவர்கள் இன்று உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் சில மாணவமாணவிகள் கலக்கத்துடன் இருந்தனர். பெற்றோர்களுடன் வகுப்புகளுக்கு வந்த மாணவமாணவிகளை மூத்த மாணவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இனிப்பு கொடுத்தும் அழைத்து சென்றனர். சென்னை மருத்துவ கல்லூரியில் 265 எம்.பி. பி.எஸ். மாணவர்களும் ஸ்டான்லியில் 250 பேரும், கீழ்ப்பாக்கத்தில் 200 மாணவர்களும் இன்று வகுப்புகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர். தங்கள் குழந்தைகள் டாக்டர் ஆக வேண்டும், ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்ற வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரின் கனவு. ஆனால் அந்த கனவு ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது தனது மகன், மகள்கள் டாக்டர் உடையில் வருவதை இத்தனை நாட்களாக வெறும் கனவுகளாக மனதில் ஏக்கத்துடன் இருந்த அவர்களுக்கு இன்று ஆனந்த கண்ணீர் பீறிட்டது. அரசு மருத்துவ கல்லூரியில் அரசு செலவில் படிக்கும் வாய்ப்பை பெற்ற தங்கள் பிள்ளைகளை உச்சி முகர்ந்து வாழ்த்தி அனுப்பினார்கள் பெற்றோர்கள். புதிய மருத்துவ மாணவர்களுக்கு எம்.எம்.சி. புதிய கட்டிடத்தில் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கும் வகுப்பு நடந்தது. மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி கலந்து கொண்டு பேசினார். மாணவர்கள் கல்லூரியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், விடுதியில் எவ்வாறு எப்படி இருக்க வேண்டும். முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் பாடங்கள் பற்றி எடுத்து கூறினார். பெற்றோர் கஷ்டம் அறிந்து நன்றாக படிக்க வேண்டும். மிக சிறந்த மருத்துவ சேவை ஆற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். மருத்துவ மாணவர்களும் உடை கட்டுப்பாடு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. அதன் படிதான் அனைத்து மருத்துவ கல்லூரியிலும் மாணவமாணவிகள் வகுப்பிற்கு செல்ல வேண்டும். ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார்கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலை முடியை விரித்து விட்டபடி வராமல் இறுக்கமாக கட்டி கொண்டு வர வேண்டும். மாணவர்கள் பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து இன் செய்து ஷு அணிந்து வரவேண்டும் என்ற மருத்துவ கல்வி இயக்கம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மூத்த மாணவர்கள் புதிய மாணவமாணவிகளை ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. ராகிங் பற்றி புகார் தெரிவிக்க புகார் பெட்டி அனைத்து மருத்துவ கல்லூரியிலும் வைக்கப்படுகின்றன. ராகிங் நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பு மாணவர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பை அந்த குழு ரகசியமாக கண்காணித்து தினமும் முதல்வருக்கு அறிக்கை கொடுக்கும். இதனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் பயப்பட தேவையில்லை. ராக்கிங்கில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக தெரிவிக்கலாம். அவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் விமலா மற்றும் துறை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.