"விடுமுறை" இல்லை- தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நாளை இயங்கும் - தாளாளர்கள் மட்டும் உண்ணாவிரதம்!

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளி தாளாளர்கள் மட்டும் திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டத்தில் நாளை ஈடுபடுவார்கள் என்றும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டாங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் நாளை இயங்காது, விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது என்பது அரசின் பணி. அதை தனியாரே கையில் எடுத்திருப்பது சரியானது அல்ல; அத்துடன் இத்தகைய பள்ளி, கல்லூரிகளின் உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். பள்ளிகள் இயங்கும்- தாளாளர்கள் உண்ணாவிரதம் மேலும் தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை பாட்டாளி மக்கள் கட்சி நாடியது. இப்படி கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் நாளை விடுமுறை என்று அறிவித்த சுற்றறிக்கையை தற்போது திரும்பப் பெற்று, நாளை வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேபோல் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையிலும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் ... அதேபோல் சுயநிதி பொறியல் கல்லூரிகளும் தங்களது விடுமுறை அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன. இதனால் தனியார் சுயநிதி கல்லூரிகளும் நாளை வழக்கம் போல செயல்படும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.