சபரிமலை மண்டல பூஜை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடை திறப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

இந்த வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து வருகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டிருந்தாலும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன்களில் தான் அதிக அளவில் பக்தர்கள் குவிவார்கள். இவ்வருட மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 16ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு எந்த பூஜையும் நடைபெறாது. இரவு 7 மணியளவில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரியும், மாளிகைப்புரத்து அம்மன் கோயில் மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்கும் சடங்குகளை நடத்தி வைப்பார். கார்த்திகை 1ம் தேதியான நவம்பர் 17ம் தேதி முதல் புதிய மேல்சாந்திகளின் தலைமையின்கீழ் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களில் முக்கிய பூஜைகள் நடைபெறும். அன்று முதல் 41 நாட்கள் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நடைபெறும். இதையொட்டி தினமும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சிகால பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை முதல் நண்பகல் 12 மணிவரை நெய்யபிஷேகமும் நடைபெறும். பக்தர்களுக் காக குடிநீர், தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து வருகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.