சர்ச்சையில் சிக்கிய 'பாக்சர்' சரிதா தேவிக்கு சச்சின் திடீர் ஆதரவு- மத்திய அமைச்சருக்கு கடிதம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

குத்துச்சண்டை சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சரிதாதேவிக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது பிரச்சினையை தீர்க்க கோரியும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மத்திய விளையாட்டு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு தென்கொரியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியின் போது இந்திய வீராங்கனை சரிதா, தான் சிறப்பாக விளையாடிய போதிலும் உள்ளூர் வீராங்கனைக்கு சாதகமாக நடுவர்கள் தீர்ப்பு வழங்கி விட்டதாக கூறி கதறி அழுததுடன், தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை ஏற்க மறுத்து, அதை தன்னை வீழ்த்திய தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கின் கழுத்தில் அணிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த செயலுக்காக சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் கண்டனம் தெரிவித்து சரிதா தேவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைந்தது. இதையடுத்து தனது செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார் சரிதா தேவி. பதக்கத்தையும் ஏற்றுக் கொண்டார். ஆனாலும் சரிதாதேவிக்கு நீண்ட கால தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால் 29 வயதான மணிப்பூரைச் சேர்ந்த சரிதாதேவியின் குத்துச்சண்டை வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு, சச்சின் டெண்டுல்கர் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவலுக்கு டெண்டுல்கர் ஒரு கடிதம் எழுதி சரிதாதேவி பிரச்சினையை தீர்க்க கேட்டுக் கொண்டுள்ளார். அந்த கடிதத்தில் டெண்டுல்கர் கூறியுள்ளதாவது: சரிதாதேவி விவகாரத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு அரசு முழுமையாக ஆதரவு அளித்து, அவரது குத்துச்சண்டை வாழ்க்கை உரிய காலத்திற்கு முன்பாக முடிந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில், உணர்ச்சியின் வேகத்தில், துரதிர்ஷ்டவசமாக அவர் அவ்வாறு நடந்து கொண்டு விட்டார் என்பதை அறிவேன். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இன்னொரு வாய்ப்பை பெற அவர் தகுதியானவர். தனது ஒழுங்கீனத்திற்காக அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனவே சரிதாதேவியை மன்னித்து, அவர் குத்துச்சண்டையில் தொடர்ந்து மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த எல்லா விதமான முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி இந்த பிரச்சினையை கவனிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சங்கத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளை கொண்டு ஒரு குழுவை உருவாக்க வேண்டும். சரிதாதேவி தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து அவருக்காக சர்வதேச குத்துக்சண்டை சங்கத்திடம் இந்த குழு வாதிட வேண்டும். விளையாட்டு மீது மிகுந்த ஆர்வமுள்ள ஒரு வீராங்கனையான சரிதாதேவி, நாட்டிற்காக போட்டிகளில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார். அரசாங்கம் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அவருக்கு துணையாக நிற்க வேண்டும். அதற்குரிய எல்லா தகுதியும் அவருக்கு உண்டு. இவ்வாறு டெண்டுல்கர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.