பந்து தாக்கி படுகாயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உயிரிழந்தார்.

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

ஆஸ்திரேலியாவில் ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த நியூ சவுத்வேல்சுக்கு எதிரான ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் பிலிப் ஹியூக்ஸ் 63 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது, எதிரணி வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பந்தில் படுகாயமடைந்தார். மணிக்கு 90 மைல் வேகத்தில் எழும்பி வந்த பந்தை (பவுன்சர்) அவர் புல்ஷாட் அடிக்க முயற்சித்த போது, கணிப்பு தப்பவே பந்து தலையின் இடது பக்கத்தில் சூறாவளித்தனமாக தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த விபரீதத்தில் சிக்கினார். நிலைகுலைந்து மைதானத்தில் மயங்கி விழுந்த அவர் சுயநினைவின்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அருகில் உள்ள சிட்னி செயின்ட் வின்சென்ட்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூளையின் அழுத்தத்தை தணிக்க 1 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. செயற்கை சுவாச கருவியான வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. பந்து தாக்கிய வேகத்தில் மூளையில் பலத்த அடிபட்டது. காயத்தன்மையை துல்லியமாக அறிய மேலும் சில ஸ்கேன் பரிசோதனைகள் நேற்று செய்யப்பட்டன. அவர் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிலிப் ஹியூக்ஸ் 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வரும் 30-ம் தேதி தனது 26 பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் பிலிப் ஹியூக்ஸ் மரணம் அடைந்தார். அவரது உயிரிழப்பு அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.