சார்க் நாடுகள் இடையே மின்சார பரிமாற்ற ஒப்பந்தம்: எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், கடைசி நேரத்தில் சம்மதம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் சார்க் என்னும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் கலந்து கொண்டனர். நேபாள பிரதமர் விருந்து மாநாட்டின் 2-வது நாளான நேற்று, மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரும் காட்மாண்டில் இருந்து 30 கி.மீ. கிழக்கே அமைந்துள்ள துலிகேல் என்ற கிராமத்துக்கு ஓய்விற்காகவும், சுற்றிப்பார்க்கவும் சென்றனர். அவர்களுக்கு நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா விருந்து அளித்து கவுரவித்தார். இந்த விருந்தின்போது பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்து, கை குலுக்கி, நலம் விசாரித்தனர். பின்னர் அனைவரும் காட்மாண்டு திரும்பினர். முடிந்தது மாநாடு அதைத் தொடர்ந்து அங்கு சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. நிறைவுரை ஆற்றிய நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், என்ன வகையிலான சார்க் அமைப்பு வேண்டும், என்ன வகையிலான சீர்திருத்தம் வேண்டும் என்பதை தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வர்த்தகம், மக்கள் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வதற்கு சிறப்பான பயண இணைப்பு முக்கியம் என வலியுறுத்தினார். சார்க் உறுப்பு நாடுகளின் பொதுவான எதிர்பார்ப்பு வளமும், அமைதியும்தான் எனவும் அவர் கூறினார். மின்சார பரிமாற்ற ஒப்பந்தம் இந்த மாநாட்டின் முக்கிய அம்சம், சார்க் நாடுகளிடையே மின்சார பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் கடைசி நிமிடத்தில் கையெழுத்தானதுதான். இந்தியா முன்மொழிந்த இந்த திட்டத்தை ஆரம்பத்தில் பாகிஸ்தான் எதிர்த்தது. ஆனால் துலிகேல் கிராமத்தில் கலந்துரையாடியபோது, இந்த ஒப்பந்தத்தின் அவசியம் குறித்து நவாஸ் ஷெரீபிடம் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர் உடன்பாட்டில் கையெழுத்திட கடைசி நேரத்தில் சம்மதித்தார். இந்த ஒப்பந்தம், சார்க் மாநாட்டின் முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. 36 அம்ச பிரகடனம் இந்த மாநாட்டின் இறுதியில் 36 அம்சங்களை கொண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் அடுத்த 15 ஆண்டுகளில் சார்க் அமைப்பினை ஒரு பொருளாதார யூனியனாக அபிவிருத்தி செய்வதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அத்துடன், வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பின்மை தணிப்பு, எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் ஒழிப்பு, ஆயுதக்கடத்தல் தவிர்ப்பு, போதைப்பொருட்கள் ஒழிப்பு உள்ளிட்டவையும் முக்கிய இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தானில் அடுத்த மாநாடு மாநாட்டின் நிறைவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். அப்போது அவர், சார்க் நாடுகள் இடையே அமைதி, முன்னேற்றம், வளம் காண்பதற்கு இந்த மாநாடு வழி வகுத்துள்ளது என குறிப்பிட்டதுடன் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியதற்கு நேபாளத்துக்கு நன்றி தெரிவித்தார். 19-வது சார்க் உச்சி மாநாடு பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.