சத்திய மூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் விழாவில் கம்யூ, முஸ்லிம் லீக் தலைவர்கள் பங்கேற்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பு ஏற்றதும், தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்களை நேரில் சென்று சந்தித்தார். எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க இந்த சந்திப்பு அச்சாரம் என்று பேசப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று சத்திய மூர்த்தி பவனில் நடந்த விழா அமைந்தது. நேருவின் 125வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் பத்திரிகையான தேசிய முரசு 7வது ஆண்டு விழா இன்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தர்ராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ வரவேற்றார். நேரு 125 என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கோபண்ணா பேசும் போது, முன்பு ஒருமுறை காமராஜர் ஒரு சகாப்தம் என்ற நூல் வெளியீட்டின் போது அதில் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். பிற்காலத்தில் அது ஒரு மெகா கூட்டணி அமைய அடித்தளமாக இருந்தது. அது போல் இந்த விழாவில் மதசார்பற்ற கட்சி தலைவர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். கூட்டணி அமையுமா என்பது தெரியாது. ஆனால் மத சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு இது ஆரம்ப கட்டமாக அமையும் என்றார். கருத்தரங்கில் பேசிய தலைவர்கள் கூட்டணி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்கள். நல்லகண்ணு பேசும் போது, இதுதேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமல்ல அதே நேரத்தில் மதசார்புள்ள கட்சிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவது குறித்து மத சார்பற்ற கட்சிகள் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்க்கிறோம் என்றார். சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., இது தேர்தல் கூட்டணி மேடை அல்ல. அதே நேரத்தில் மதசார்பற்ற கட்சிகளோடு இணைந்து வகுப்பு வாத சக்திகள் எடுக்கும் முடிவை எதிர்க்க போராடுவோம். அது காங்கிரசோடு மட்டுமல்ல. மதசார்பற்ற அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராடுவோம். அதற்கான ஒரு பரந்த மேடையை உருவாக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். மதசார்பின்னைமையை விட்டு விட்டால் நாடு நாடாக இருக்காது என்றார். காதர் மொய்தீன் பேசும் போது, இந்திய வளர்ச்சிக்கான கொள்கையை வகுத்து கொடுத்தவர் நேரு. அவர் அழைத்து வந்த பாதையில் சென்றால்தான் நாடு வளர்ச்சி அடையும். சமநாடு, ஜனநாயக சமய சார்பற்ற பாதையில் சென்றால்தான் நாடு நாடாக இருக்கும் என்றார். விழாவில், முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, குமரி அனந்தன், அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், ஜெயக்குமார், மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், பூவை ஜேம்ஸ், முன்னாள் எம்.பி. ஆரூண், நாசே.ராமச்சந்திரன், சிரஞ்சீவி கவுன்சிலர்கள் வி.ஆர்.சிவராமன், தமிழ்செல்வன் மற்றும் துறைமுகம் ரவிராஜ், அகரம் கோபி, புல்லட் சாகுல், குறிஞ்சி பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நேருவின் 125வது ஆண்டு பிறந்தநாள் சிறப்பிதழை நாராயணசாமி வெளியிட்டார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.