கூட்டணிக்காக கொள்கைகளை அடகு வைக்க முடியாது: தமிழிசைக்கு ராமதாஸ் பதிலடி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

"கூட்டணி என்பது கொள்கைகளை அடகு வைப்பது அல்ல; பிரதமர் நரேந்திர மோடியும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல. எனவே கூட்டணி இலக்கணம் குறித்த தமிழிசை பாடம் தேவையில்லை" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராமதாசு, வைகோ போன்றோர் மோடியை விமர்சிக்கக்கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்கள் போல செயல்படக்கூடாது என்று பேசியிருக்கிறார். இதற்கு முன் நடத்திய பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம் குறித்தும் அவர் பாடம் நடத்தியுள்ளார். கூட்டணிக்கான இலக்கணம் குறித்தெல்லாம் மற்றவர்கள் பாடம் நடத்தித் தெரிந்து கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. அதேநேரத்தில் கூட்டணி என்பது கொள்கைகளை அடகு வைப்பது அல்ல என்பதை எனது பாசத்திற்குரிய தமிழிசை சவுந்தரராஜனும், கூட்டணி இலக்கணம் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நட்புக்கு அழகு தவறுகளைத் திருத்துதல் என்ற உண்மையை புரிந்து வைத்திருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் தவறு செய்யும்போது அதை முதல் ஆளாக சுட்டிக்காட்டுகிறோம்; தவறை சரி செய்யும்படி வலியுறுத்துகிறோம். இது கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டது தான்; இது இலக்கணத்தை மீறிய செயல் என்று எவரேனும் நினைத்தால் அவர்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்று தான் கருத வேண்டும். எந்தக் கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி நலனுக்காக மக்கள் நலனில் சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் எனக்கு இல்லை. அதேநேரத்தில் எந்த தருணத்திலும் அரசியல் நாகரீகமின்றி யாரையும் நான் விமர்சித்ததில்லை; இனியும் விமர்சிக்கப் போவதில்லை. திருச்சியில் கடந்த 26.09.2013 அன்று நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் இளந்தாமரை மாநாட்டில் பேசிய அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்படும்; இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்தி தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். அவர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போதும் நரேந்திர மோடி இதே வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் இவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இதை சுட்டிக்காட்டுவது தவறா? ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் கொண்டு குவித்த சிங்களப்படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் வலியுறுத்தின; தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான தமிழக பாரதிய ஜனதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. இதை மத்திய அரசு ஏற்றதா? சிங்களப்படையினருக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதுடன், இலங்கை அரசு நடத்தும் அனைத்து ராணுவ மாநாடுகளிலும் இந்தியா தான் முதலில் பங்கேற்கிறது. ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; இந்த விசாரணையை சென்னையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தியது. மத்திய அரசின் செவிகளில் தமிழக மக்களின் குரல் ஏறியதா? இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அனைத்து வழிகளிலும் திணிப்பதைத் தவிர மற்ற மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? தேர்தல் வாக்குறுதிக்கு எதிரான இந்த செயலை சுட்டிக்காட்டினால் அது என்ன தேசத் துரோகமா? அரசுத்துறை நிறுவனங்களின்பங்குகளை தனியாருக்கு விற்பது, வங்கிகள் தனியார் மயமாக்கல், பொது வினியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் நோக்குடன் உணவு மானியத்தை நேரடி பயன் மாற்றத் திட்டத்தில் வழங்குதல், நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தல், வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலையை குறைத்தல், மொழி மற்றும் கலாச்சாரத் திணிப்பு ஆகியவற்றை பா.ம.க.வால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் இவற்றை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம். இதற்கெல்லாம் மேலாக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த கொடியவன் போர்குற்றவாளி ராஜபக்ச, இலங்கை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துவதை எப்படி ஏற்க முடியும்? ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட இப்படி மோடி வாழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தமிழிசை சவுந்தரராஜனுக்கு மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உணர்வுள்ள எந்த தமிழனும் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டான். இந்த உணர்வுடன் பிரதமரை விமர்சித்தார் என்பதற்காக, அரசியல் நாகரீகமின்றி ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களின் கோரிக்கையை பாரதிய ஜனதாவிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் கருத்துப் பகிர்வுக்காக ஒருங்கிணைப்புக்குழு போன்ற ஏதேனும் ஓர் அமைப்பை பாரதிய ஜனதா உருவாக்கியுள்ளதா? அத்தகைய அமைப்பு இல்லாத நிலையிலும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தொடர்வண்டித் திட்டங்கள் குறித்து அத்துறை அமைச்சராக இருந்த சதானந்த கவுடா உள்ளிட்டோரிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினர் அளித்த மனுக்கள் மீது மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அவ்வாறு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் இப்படி ஒரு யோசனையை தமிழிசை கூறுகிறார்? தங்கள் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி பிரதமராக இருப்பது பாரதிய ஜனதாவுக்கும், தமிழிசை போன்றவர்களுக்கும் பெருமையாக இருக்கலாம். ஆனால், பிரதமர் என்பவர் 122 கோடி இந்தியர்களுக்கும் பொதுவானவர். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. பிரதமர் குறித்து விமர்சனமே செய்யக்கூடாது என்பது புண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் மூடி வைத்து புரையோடிப் போகச் செய்வதற்கு சமமானதாகும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மனதில் கொண்டு, ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதில் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை திருத்திக் கொள்ள பா.ஜ.க. முன்வர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலன் தான் முதன்மையானதாகும். அதைக் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் ஆரோக்கியமான அரசியலை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்" இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.