திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 25 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர். உலகில் உள்ள சிவாலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்ச பூத தளங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 26ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் மாலையில் ஏற்றப்படவுள்ளது. நேற்று அதிகாலை கோவிலில் 4 மணிக்கு சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதேநேரத்தில் அர்த்த மண்டபத்தில் பஞ்சமுக தீபம் ஏற்றுவதற்கான பூஜைகள் நடந்தன. சாமிக்கு அபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது சிவாச்சாரியார்கள் மந்திரங்களை ஓதினர். அதனைத் தொடர்ந்து கோவில் அருணாச்சல குருக்கள் 5 பெரிய அகல்விளக்குகளில் பஞ்சமுக தீபத்தை ஏற்றினார். பரணி தீபம் சாமி சன்னதியின் உள்பிரகாரத்தை சுற்றிவந்து கைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் 5 அகல்விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பரணி தீபம் பக்தர்களின் பார்வைக்காக வெளிப்பிரகாரம் கொண்டுவரப்பட்டது. இதனை பார்த்ததும் கோவில் வளாகத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் பரணி தீபம் காலபைரவர் சன்னதியில் காலை 11 மணிவரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வதராஜ குலத்தினரால் மலைஉச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இறைவன் மலைக்கு சென்றுவிட்டதாக கருத்தில் கொண்டு கோவில் சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டன. மாலையில் கோவில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துவிட்டு 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். அப்போது பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக சாமி சன்னதியில் இருந்து வெளியேவந்து கிளிகோபுரம் அருகிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். மாலை 5.55 மணியளவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். அர்த்தநாரீஸ்வரர் வெளியேவந்ததும் கோவில் கொடிமரம் முன்புள்ள அகண்ட தீபத்தில் சரியாக மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தல் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்திருந்த பக்தர்கள பக்தி பரவசத்துடன் அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமச்சிவாயா எனும் பக்தி கோஷங்களை எழுப்பினர். மலை உச்சியில் தீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றினர். ஆங்காங்கே வானவேடிக்கையும் நடைபெற்றது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சென்றனர். மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மலை மீது கமாண்டோ படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடடிருந்தனர். 2 ஆளில்லாத குடடி விமானம் மற்றும் பறக்கும் ராட்சத பலூன் ஆகியவற்றின் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தீபத்திருவிழாவைக் காணவரும் பக்தர்களுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 2000 சிறப்பு பேருந்துகளும், 8 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, நகரமன்ற தலைவர் என்.பாலசந்தர், கலெக்டர் அ.ஞானசேகரன், ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், கோவில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன், கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜோதிமணி, நகரமன்ற துணைத் தலைவர் ஹேமாபாண்டு, சிவன்தொண்டன் எஸ்.வைதீஸ்வரன், கோவில் குருக்கள் ரமேஷ்குருக்கள், சங்கர் குருக்கள், மூர்த்தி குருக்கள் உள்பட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று பவுர்ணமி என்பதால் மகாதீபத்திற்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 14 கி.மீ. தூரம் கிரிவவலம் வந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனையும் பயப்பக்தியுடன் தரிசனம் செய்தனர். மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மண்டபம் முன்பு எழுந்தருளியுள்ள பஞ்சமூர்த்திகளுக்கு சிற்பபு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதியை வலம் வந்தனர். மகாதீபத்திருவிழா 10 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும் 8ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் வெள்ளி வாகன உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது. மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு பிரகாசிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.