திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து வெளியேற்றி இருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் இருந்து நேற்று தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் வெளியே வந்தனர். சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பேரவையில் 2014-2015-ம் ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நான் பேசத் தொடங்கினேன். எனது உரையில் பல்வேறு கருத்தினை, ஆதாரங்களுடன், புள்ளி விவரங்களோடு பேச வந்தேன். இந்த செய்தியறிந்து எனது பேச்சால் பினாமி ஆட்சிக்கு ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று என்னை பேசவிடாமல் வெளியேற்றியிருக்கிறார்கள். எனது பேச்சில், கடந்த நிதிநிலை அறிக்கையில், முன்னாள் முதல்-அமைச்சர், ஜெயலலிதா 110 விதியின்கீழ் படித்த 36 அறிவிப்புகளும் அதற்கு 31 ஆயிரத்து 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, இப்போது 2-வது துணை மதிப்பீட்டில் வெறும் 1,751 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஒப்புதல் பெறப்படுகிறது என்றால் மற்ற அறிவிப்புகளுக்கு தொகை ஒதுக்கப்படவில்லையா?. அந்த அறிவிப்புகள் எல்லாம் வெறும் அறிவிப்புகள் தானா? என்று கேட்டேன். அதற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கடந்த 4-ந் தேதி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் நான் எழுப்பிய வினாவிற்கு 50 நிமிடங்களுக்கு மேல் படித்த அறிக்கையையே மீண்டும் படிக்கத் தொடங்கினார். அவர் படித்தது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. அதற்கும் நான் ஆதாரத்தோடுதான் வந்தேன். அவர்கள் அடிக்கல் நாட்டியதை எல்லாம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்று உண்மைக்கு மாறாக அவையில் அறிவிக்கிறார், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அது மட்டுமல்ல; தற்போது எழுந்துள்ள உரத்தட்டுப்பாடு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சத்துணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல், மேலும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதிலும் பெரும் ஊழல் நடந்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கிறது. மேலும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை இவைகளைப் பற்றி எல்லாம் பேச இருந்தேன். ஆனால், திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து அவையில் இருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். அமைச்சர் வைத்திலிங்கம் தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து என்னை அடிப்பது போல் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு சபாநாயகரும் துணை போகிறார் என்றால் சட்டப் பேரவையை எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். அதனைத் தொடர்ந்து, துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்கள் சட்டமன்ற கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று சொன்னதற்கு, இந்த ஆட்சியை பினாமி ஆட்சி என்றார். அதற்கு அமைச்சர் வைத்திலிங்கம் வேட்டியை மடித்துக் கொண்டு தாக்க வருவது போல் வருகிறார். இது சட்டமன்றக் கூட்டமாகத் தெரியவில்லை. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.