பாஜகவில் கோலிவுட் பிரபலங்கள். கங்கை அமரன், குட்டி பத்மினி, நெப்போலியன்....

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர். பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஏராளமான பாஜக தொண்டர்களும் திரண்டு அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து மறைமலர் நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன், நடன இயக்குநரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், நடிகை குட்டி பத்மினி, முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மணி, அதிமுக இளைஞரணிச் செயலர் முத்துகுமார் உள்ளிட்டோர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் அமித்ஷா பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அரசில் ரூ12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மக்களிடத்தில் காங்கிரஸ்- தி.மு.க. பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. பாஜக மிகப் பெரிய அரசியல் கட்சி. ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி. இங்கே வாரிசு அரசியலால் வந்தவர்கள் யாரும் இல்லை. அனைவருமே எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டின் கடற்கரை ஓர மாநிலங்களில் பாஜக பலவீனமாக இருக்கிறது. நான் பாஜக தலைவராக பொறுப்பேற்ற போது முதலில் எடுத்துக் கொண்ட சபதமே கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 7 மாநிலத்திலும் பாஜகவை வலிமையானதாக்க வேண்டும் என்பதுதான். உங்களைப் பார்த்து கேட்கிறேன்.. நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான முன்னேற்றப் பாதையில் தமிழகமும் இணைய விரும்புகிறீர்களா? 24 மணிநேரமும் ஒவ்வொரு கிராமத்திலும் மின்சாரத்தை விரும்புகிறீர்களா? குடும்ப அரசியல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்தானே? இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்தானே? இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கவுரவமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள்தானே? அப்படியானால் தமிழகத்தில் பாஜகவை மிகப் பெரிய கட்சியாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் 60 ஆயிரம் பூத்துகளுக்கு செல்லுங்கள்.. ஒரு பூத்துக்கு 100 பேர் என 60 லட்சம் பேரை உறுப்பினராக்குங்கள். அப்படி நீங்கள் சேர்த்தால் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக நீண்டகாலத்துக்கு ஆட்சி செய்ய வைக்க முடியும். தமிழகத்தின் மரியாதையைக் காப்பாற்ற தமிழகத்துக்கு கவுரவமான இடத்தை ஏற்படுத்த மத்தியில் நீண்டகாலம் மோடி ஆட்சி இருக்க வேண்டும். தமிழகத்தின், தமிழரின், தமிழின் கவுரவத்துக்கு பாஜக இங்கே வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.