பாலசந்தரின் உடல் பெசன்ட்நகர் மின்மாயானத்தில் தகனம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தமிழ்பட உலகில் இயக்குனர் சிகரம் என்று பாராட்டப்பட்டவர் கே.பாலசந்தர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். என்றாலும், கடந்த 15-ந்தேதி அவருடைய நிலைமை கவலைக்கிடமானது. அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவர் தனது சுயநினைவை இழந்தார். அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடினார்கள். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 7 மணிக்கு கே.பாலசந்தர் மரணமடைந்தார். நினைவு திரும்பாமலே அவரது உயிர் பிரிந்தது. மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் உடல் காலை முதல் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்தது. அவரால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றும் அவரது படங்களில் நடித்த கலைஞர்கள் பலர் நேரில் வந்து பாலசந்தருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரை உலகைத் தாண்டி திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பாலசந்தருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மதியம் இரண்டு மணி அளவில் பாலசந்தர் உடலுக்கு அவரது குடும்ப மரபுப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ரதம் போன்ற வாகனத்தில் பாலசந்தரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் சென்னை மைலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். வாரன் சாலையில் இருந்து பெசன்ட்நகர் மின்மயானம் வரை 6 கி.மீ தூரம் நடந்தே சென்றார்கள். இறுதி ஊர்வலம் 5.10 மணி அளவில் பெசன்ட் நகர் மின்மயானம் சென்றடைந்தது. இறுதி ஊர்வலம் நடந்த சாலையின் இருமருங்கிலும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலசந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், விஜயகுமார், விவேக், அமீர், பார்த்திபன், இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.செல்வமணி, சேரன், பாலா, சமுத்திரக்கனி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த இறுதிச் சடங்கில் ரஜினி, பாரதிராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன், திருச்சி சிவா எம்பி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நடிகைகள் ரேகா, கல்கி ஸ்ருதி, சுஹாசினி உள்ளிட்டோரும் மயானத்திற்கு வந்திருந்தனர்.குடும்ப சம்பிரதாயப்படி சில சடங்குகள் நடத்தப்பட்ட பின்னர் அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யபட்டது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.