10 மாவட்டங்களில் அண்ணா தி.மு.க. 2ம் கட்ட அமைப்பு தேர்தல் துவங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி இன்று 2வது கட்டமாக அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல் துவங்கியது. தொண்டர்கள் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் வந்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார்கள். மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களும், தேர்தல் ஆணையாளர்களும் அந்தந்த பகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியை கவனித்து வருகிறார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் நடைபெறும். அதன்படி இப்போது அனைத்து பொறுப்புகளுக்கும் அண்ணா தி.மு.க. தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தமிழகம் முழுவதும் மொத்தம் 14 கட்டங்களாக நடைபெறுகிறது. 10 மாவட்டங்களுக்கு ஒரு மண்டல பொறுப்பாளர் வீதம் 5 மண்டல பொறுப்பாளர்களை ஜெயலலிதா நியமித்திருக்கிறார். இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள், ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, அண்ணா தி.மு.க.வின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்பு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. முதற்கட்டமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் கிளை நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல், கடந்த 11ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளன. 2ம் கட்ட தேர்தல் இதனையடுத்து, 2வது கட்டமாக இன்று முதல் வரும் 31ம் தேதிவரை, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் கழக அமைப்பு தேர்தல்கள் நடைபெறுகிறது. தேர்தல் நடத்த மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட வாரியாக தேர்தல் ஆணையாளர்களை ஜெயலலிதா நியமித்திருக்கிறார்.கழக அமைப்புகளுக்கான 2வது கட்ட தேர்தலை முன்னிட்டு, அதுதொடர்பான பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றன. கடலூர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் குறித்து, சிதம்பரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பா. வளர்மதி, எம்.சி. சம்பத் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தஞ்சை வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழக அமைப்புத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கோவையில் நடைபெற்றது. அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, டி.பி. பூனாட்சி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, எஸ்.கோகுல இந்திரா, எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.பழனியப்பன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கடலூர் கடலூரில் கழக அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருவந்திபுரம் செங்கமலத்தாயார் திருமண மண்டபத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறுவதை மண்டல தேர்தல் பொறுப்பாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான பழனியப்பன், மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான செ. செம்மலை, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், மற்றும் சொரத்தூர். இரா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் அங்கு குழுமியிருந்த கழக உறுப்பினர்களை பரிவோடு விசாரித்த அமைச்சர் பழனியப்பன், அவர்கள் ஆர்வத்தோடு உறுப்பினர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டு அவை சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனவும் பரிசீலனை செய்தார். மேலும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து கழக அமைப்பு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது ஒன்றிய செயலாளர் ராம. பழனிசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதாகர், நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ராதிகா ஜெயபால், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் விஜயராயலு, கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ஒவ்வொரு ஊரிலும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் கலந்து கொண்டனர். கோவையில்.. நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற்ற அமைதியான மனு தாக்கல் நிகழ்வை, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பூனாட்சி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர். அண்ணா தி.மு.க. உள்கட்சி தேர்தல் வேட்புமனு, இன்று காலை தொடங்கியது. மாநகர் பகுதியில் 80 வார்டுகளிலும், 3 ஒன்றியம் மற்றும் ஒரு நகர் பகுதிக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க வினர் உற்சாகமாக, நீண்ட வரிசையில் நின்று, மனுக்களை தாக்கல் செய்தனர். அண்ணா தி.மு.க வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை, தேர்தல் பொறுப்பாளர்கள் சி.ஆர்.சரஸ்வதி, ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சுய விலாசம், கட்சியில் பணியாற்றிய விவரங்கள் என, விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்தோடு வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். வார்டு செயலாளர் பதவிக்கு ரூ. 1000மும், பிற பதவிகளுக்கு ரூ. 700ம் வேட்பு மனுவுடன் செலுத்தினர். புறநகர் பகுதியிலும் உற்சாகம் கோவை புறநகர் பகுதியில் உள்ள 9 ஒன்றியங்கள், 26 பேரூராட்சிகள், 3 பகுதிகள், 2 நகர பகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. சூலூர் ஒன்றியத்தில் உள்ள இருகூர், கருமத்தம்பட்டி, மேப்பரிபாளையம் உள்ளிட்ட இடங்களில், அண்ணா தி.மு.க. வினர் தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர் பூனாட்சி, சரஸ்வதி ரங்கசாமி ஆகியோரிடம் மனுக்களை பூர்த்தி செய்து உரிய விண்ணப்ப கட்டணத்தோடு செலுத்தினர். அனைத்து இடங்களிலும், அமைதியான முறையில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. ஒவ்வொரு பதவிக்கும், போட்டியிட விரும்பும் அனைவரிடமும் மனுக்கள் பெறப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற இடங்களை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.