தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புத்தாண்டு பிறப்பதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி: மத்திய அரசில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த 2014 மறைந்திட, புதுமை விளையுமா? என காத்துள்ள மக்களை நாடி வருகிறது 2015. வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை. வாக்குறுதிகளை காப்பாற்றும் வாய்மை இல்லை. மின்சாரமில்லை. அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப்பட்ட கட்டணமோ அநியாயம். பேருந்துக்கட்டண உயர்வோ பேரதிர்ச்சி. பால் விலை உயர்வோ மகா கொடுமை. உப்பு முதல் உணவுப்பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு. புதிய தொழிற்சாலைகள் இல்லை; ஏற்கனவே இருந்த தொழில்களை காக்கும் திராணியும் இல்லை. மத்திய அரசோ வளர்ச்சி பணிகளில் நாட்டம் செலுத்துவதைவிட பள்ளிகளில் சமஸ்கிருத வாரம். அரசுத்துறைகளுக்கான இணையதளங்களில் இந்தி மொழி, மதச்சார்பற்ற கொள்கையை மண்ணில் மிதித்து இந்துத்வாவின் நடமாட்டம் என்பனபோல் ஆரவார ஆதிக்க அரசியலில் ஆர்வம் காட்டுவதுடன்; தமிழகம் மேலும்மேலும் பாதிக்கப்படும் வகையில் மேகதாது என்னுமிடத்தில் காவிரியில் இரண்டு புதிய அணைகளை கட்டிட முனைந்திடும் கர்நாடக அரசை தடுத்திடாமை. உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையிலும் முல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு புதிய அணை கட்டுதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தமிழகத்திற்கு பாதகம் செய்தல். தமிழரைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற வாழ்த்துரைத்து தமிழினத்திற்கு துரோகமிழைக்கும் திசையில் நடைபோடல் என 2014ஆம் ஆண்டு தமிழகத்திற்குதமிழக நலனுக்குதமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடியாக கேடுகளை பதிவுசெய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது. இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவுகளிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்படவும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்போடு உழைத்திட வேண்டும். அதற்கு இந்த புத்தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஏழை எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்ற மிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். வரும் 2015ம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டுமென தே.மு.தி.க. சார்பில் அனைவருக்கும் எனது இதயமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: ஆட்சியாளர்களின் வருமான வேட்கை காரணமாக அரசு விற்கும் மதுவைக்குடித்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்; 2 லட்சம் குடும்பங்கள் ஆதரவற்றவை ஆகின்றன. ஆனாலும், ஆட்சியாளர்கள் இலக்கு வைத்து மது விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். ஏமாற்றங்களையும், துயரங்களையும் விரட்டி, மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கான மந்திரம் மக்களின் ஆள் காட்டி விரலின் நுனியில் தான் இருக்கிறது. மக்கள் விரும்பும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த இந்த புத்தாண்டில் அடித்தளம் அமைத்து அடுத்த ஆண்டில் செயல்படுத்திக்காட்ட இந்த புத்தாண்டு நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தமிழக மக்களிடம் புதிய நம்பிக்கையை பெறுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. மத்தியமாநில அரசுகளின் மக்கள் விரோதப்போக்கை தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்வதன் மூலம் 2016 ஆம் ஆண்டில் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்க 2015 ஆண்டு துணை புரியும் என்கிற நம்பிக்கை உள்ளது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: இந்த புத்தாண்டில் இளைஞர்களும் பொது மக்களும் புகையிலை இல்லாத, மது இல்லாத உலகை உருவாக்க வேண்டும். இனி வரும் காலம் வசந்த காலமாக திகழ, அனைவரும் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: ஜாதி, மத பேதங்களை கடந்த, சமத்துவமும், சகோதரத்துவமும், வளமையும், மகிழ்ச்சியும் நிறைந்த பாரதம் தான் நமது சிந்தனையாகவும், குறிப்பாக இளைஞர்களின் லட்சியமாகவும் இருக்க வேண்டும். இந்த உறுதியோடும், உணர்வோடும் நமது பயணம் அமைந்திட இந்த இனிய ஆங்கில புத்தாண்டு நன்னாளில் இந்தியத்திருநாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்: நாட்டில் தீவிரவாதங்கள் ஒழிந்து அனைத்து மத மக்களும் ஒருதாய் மக்கள் போல் ஒன்றாக இணைந்து வாழவேண்டும். ஏழை, எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். வறுமை ஒழிந்து செழிப்புடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர்: பிறக்கும் 2015வது ஆண்டு புதுமைகள் நிறைந்ததாகவும் மக்களுக்கு மகிழ்ச்சி வழங்குவதாகவும் மத நல்லிணக்கம் மேலோங்குவதாகவும் இருக்க வாழ்த்துக்கள். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: இந்திய உலகின் முதன்மையான வல்லரசு என்னும் இலக்கை அடைய, நாட்டு மக்கள் அனைவரும் மத, இன, மொழி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேருவோம். நம் நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட அனைத்து நதிகளையும் ஒன்றிணைப்போம். மனித நேயம் வளர்ப்போம். நாடு போற்றும் நல்லவர், வல்லவர் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம். மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன்: அண்டை நாடுகளில் பயங்கரவாதம் நீங்கவும், அதேபோல் இந்தியாவில் அதன் வேர்களை கிள்ளி எரியவும் இந்த புதிய ஆண்டில் புரிந்து கொள்வோம், விட்டுக்கொடுப்போம், கூடி வாழ்வோம் என்ற தாரக மந்திரத்தை கடைபிடிப்போம் என்ற சபதமேற்போம். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்: கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்களை மறப்போம்; அனுபவித்த வேதனைகளை மறப்போம். இனி அத்தனையும் புதிதென்ற எண்ணத்தோடு புதுவாழ்க்கையை துவங்குவோம். இனிவரும் காலம் அத்தனையும் நம்முடையதாக இருக்கட்டும். இத்தனை காலம் பட்ட அத்தனை துன்பங்களையும் மறந்து புதிய சாதனைகளை படைக்க உறுதிக்கொள்வோம். அகில இந்திய டாக்டர் அம்பேத்கர்.எஸ்.சி.,எஸ்.டி., நல கூட்டமைப்பு தேசிய தலைவர் ஆதிகேசவன் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி: பூத்துக்குலுங்கிய பூ மரம் இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறது. அன்பு, பரிவு, பாசம், வீரம், விவேகம், இன்பம், இனிமை, ஒற்றுமை, நல்லுறவுடன் புதுமை படைக்க வருகை தரும் 1.1.2015 ஆண்டை வரவேற்று இந்த இனிய புத்தாண்டில் இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், வளமுடனும், நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன். திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஞானசேகரன்: புத்தாண்டு விடியல் எல்லோருக்கும் நன்மை பயக்கட்டும். சாதி, மத, இனம், மொழி நாடு கடந்து மனித நேயம் மலரட்டும். வறுமை ஒழிந்து வளம் கொழித்து தொழிலாளர்கள் வாழ்வு சிறக்கட்டும். தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ்: இப்புத்தாண்டில் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்வாங்குவாழ வாழ்த்துகிறேன். தேசத்தில் தீவிரவாதம் ஒழிந்து ஜாதி, மத, பேதங்கள் நீங்கி அமைதியும், சகோதரத்துவமும் நிலவிட எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன். மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு: முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், அம்பேத்கர் முன்னணி கழக பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.