பிரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்: ஒரு தீவிரவாதி சரண், 2 சகோதரர்களுக்கு வலைவீச்சு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பிரான்ஸில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளில் ஒருவன் சரணடைந்தான். அவனது பெயர் ஹமித் மொராத். வயது 18. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களது பெயர் சைத் கெளச்சி (வயது 34), செரீப் கெளச்சி (32). இந்த இருவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்களது படங்களை பாரிஸ் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதில் செரீப் கெளச்சி 2008ம் ஆண்டில் பிரான்ஸ் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறையில் இருந்தவன் ஆவான். பிரான்ஸ் இளைஞர்களை அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த இராக்குக்கு அனுப்பியதாக இவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் விசாரணை நடந்தபோது நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்த கெளச்சி, இராக்கின் அபுகாரிப் சிறையில் இராக்கியர்களை அமெரிக்கர்கள் மிகவும் கொடுமை செய்த விவரங்கள் தெரிய வந்தததால் அந்த நாட்டுக்கு எதிராக ஜிகாதிகளை அனுப்பியதாக கூறியது குறிப்பிடத்தக்கது. இவனும் இவனது சகோதரனும் தலைமறைவாக உள்ளனர். இந் நிலையில் பாரிஸ் நகருக்கு 140 கி.மீ. தொலைவில் உள்ள ரெய்ம்ஸ் நகரில் ஏராளமான பிரான்ஸ் கமாண்டோக்கள் ரெய்ட் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த இரு தீவிரவாதிகளும் இந்த நகரில் ஒளிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வழக்கமாகவே எல்லா மதங்களையும் கிண்டல் செய்து செய்தி, கார்ட்டூன்கள் வெளியிட்டு வந்தது. முன்பு நபிகள் நாயகம் தொடர்பாக டென்மார்க் பத்திரிக்கையான Jyllands-Posten வெளியிட்ட கார்ட்டூனையடுத்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது. அந்த கார்ட்டூனை சில ஆண்டுகள் கழித்து 2006ல் சார்லி ஹெப்டோ வெளியிட்டது. அப்போது பிரான்சில் பெரும் போராட்டம் வெடித்தது. இந் நிலையில் 2011ம் ஆண்டு இது நபிகள் நாயகத்தால் எடிட் செய்யப்பட்ட எடிசன் என்று கூறி இந்த பத்திரிக்கை தனது இதழை வெளியிட்டது. இதையடுத்து இதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 2012ம் ஆண்டில் "Innocence of Muslims" படம் தொடர்பாக இந்தப் பத்திரிக்கை சில கார்ட்டூனைகளை வெளியிட தாக்குதல் நடக்கலாம் என அஞ்சி 20 நாடுகளில் பிரான்ஸ் தனது தூதரங்களையே தாற்காலிகமாக மூடியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் பத்திரிக்கை அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பையும் மீறித்தான் நேற்று 3 தீவிரவாதிகள் இந்த அலுவலகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காலை 11 மணிக்கு சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் ஆசிரியர் குழு கூட்டம் நடப்பதை அறிந்து அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கபு, ஜார்ஜ் ஒலின்ஸ்கி, பெர்னார்ட் வெல்ஹாக் உள்ளிட்ட 4 கார்ட்டூனிஸ்டுகளையும் பத்திரிக்கையின் பதிப்பாளர் ஸ்டீபன் சார்போனீரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் 5 ஊழியர்களையும் கொன்றுவிட்டு வெளியே வந்த அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது 2 போலீசாரையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் கேலிச் சித்திரத்தை, இப் பத்திரிகை சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதுதான், நேற்றைய துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நேற்றைய தாக்குதலில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதிகளிடம் ராக்கெட் லாஞ்சர்களும் இருந்தன. தேடப்படும் சகோதரர்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சரணடைந்த மொராத் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவில்லை. தாக்குதல் நடந்தபோது அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண் கார்ட்டூனிஸ்டான கோர்னி ரே போலீசாரிடம் கூறுகையில், என்னிடம் தீவிரவாதிகள் சரளமாக பிரஞ்சு மொழியில் பேசினர். தாங்கள் அல் கொய்தாவைச் சேர்ந்தவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதற்காக பழி வாங்க வந்துள்ளதாகவும் கூறிவிட்டு தாக்குதல் நடத்தினர் என்றார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.