கரும்பு விலை டன்னுக்கு ரூ.2,650 ஆக நிர்ணயம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கரும்பு உற்பத்தியை பெருக்கவும், கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதிக வருமானம் ஈட்டிட வழி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்தியுள்ளார். புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு அவற்றை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கரும்பு உற்பத்தித்திறனில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் நீடித்த நவீன கரும்பு உற்பத்தித்திட்டத்தினை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. நிழல் வலைக்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கப்பண்ணை முறைகளான பசுந்தாள் உர பயிர் சாகுபடி, உயிர் உரம் உபயோகித்தல் மற்றும் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆகியவை கரும்பு சாகுபடியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவையன்றி, நுண்நீர் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில், இதனை கையாளும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. நுண்நீர் பாசன மானியம் பெறுவதற்கு ஒரு ஏக்கர் உச்சவரம்பு என்றிருந்த வரையறையையும் புரட்சித்தலைவி அம்மா நீக்கியுள்ளார். கரும்பு உற்பத்தியை பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்து வரும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விட கூடுதலான விலையை தமிழக அரசு வழங்கி வருகிறது. 201112 ஆம் ஆண்டு டன் ஒன்றுக்கு 2,100 ரூபாய் எனவும்; 201213 ஆம் ஆண்டுக்கு 2,350 ரூபாய் எனவும்; 201314 ஆம் ஆண்டுக்கு 2,650 ரூபாய் எனவும் கரும்பின் விலையை புரட்சித்தலைவி அம்மா நிர்ணயித்து வழங்கினார். 201415 ஆம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு 2,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது சர்க்கரை தொழிலில் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான கர்நாடகம் மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய் என்ற விலையை முதலில் வழங்கவும், பின்னர் டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரையான வருவாய் பகிர்மான கொள்கைப்படி விலை நிர்ணயம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளது. இதே அடிப்படையில், மகாராஷ்டிரா மாநில அரசும் முடிவு செய்துள்ளது. இருப்பினும், தமிழக கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்த விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாயுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 450 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.