அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் மனு: தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

தி.மு.க. பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * பாராட்டுக்குரிய தலைவர் கலைஞரையும், அவரோடு கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியரையும் பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கின்றது. * நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிரதமர் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு, பொறுப்புக்கு வந்தவுடன் தொடக்கத்தில் நாம் வரவேற்கத்தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. * அதற்குப் பிறகு மத்திய அரசின் சார்பில் ஒரு சில அமைச்சர்கள் அறிவிக்கின்ற பிற்போக்குத் திட்டங்களைப் பார்க்கையில், எங்கே திசை மாறிச் செல்கிறார்களே என்ற வேதனைத் தீ தான் நம்மை வாட்டி வதைக்கச் செய்கிறது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக, மதச்சார்பின்மை கொள்கையை, கை விட்டது மட்டுமின்றி, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்ட சூழலை ஏற்படுத்தி வருகின்றது. * தற்போது மத்திய அரசின் அணுகுமுறைகளைக் கண்டு வேதனைப்பட வேண்டிய கட்டத்திற்கு ஆளாகி, அவர்கள்பால் நாம் கொண்டிருந்த நம்பிக்கையைத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுவதுடன் மத்திய அரசின் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறது. * நாட்டின் ஒருமைப்பாட்டிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பிற இயக்கங்களும் தங்களின் மாநில உணர்வு மற்றும் அரசியல் மனமாச்சரியங்களை மறந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மதவாத பேரபாயத்தை ஒன்றுபட்டு எதிர்த்திட முன்வருமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. * 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் தேர்தல் நேரத்தில் அக்கட்சி வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டு நடத்தி வருகிறது. அதன் உச்சமாக தமிழ் நாட்டின் முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது பற்றி தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பின் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்திற்குப் பிறகு, முதல்அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் எவ்வித கொள்கை முடிவுகளோ, தொலைநோக்குத் திட்டங்களோ வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. * காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்சினை. முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றிய பிரச்சினை. அமராவதி பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்சினை. தொடரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது போன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்சினைகளிலும்; வரலாறு காணாத தொடர் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு; பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் கடும் விலைவாசி உயர்வு. சத்துணவு முட்டைகள் வாங்கியதில் ஊழல்; ஆவின்பால் விற்பனையில் ஊழல்; கிரானைட் முறைகேடு, ஊழல்; தாது மணல் கொள்ளை, ஊழல்; உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளிலும் செயல்படாத அரசு எவ்வித விசாரணையையும், தீர்வையும் மேற்கொள்ளாமலும் உள்ளது. இதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. * இத்தகைய ஆட்சியின் அலங்கோலங்களை தமிழக மக்களுக்கு உணர்த்திடும் வகையில், அ.தி.மு.க. ஆட்சி கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த ஊழல்களையும், முறைகேடுகளையும் பட்டியலிட்டு, தி.மு.க.வின் சார்பில் பின்னர் அறிவிக்கப்படவிருக்கிற நாளில், மிகப் பெரிய பேரணி ஒன்றினை நடத்தி, தமிழக ஆளுநரிடம் அந்த ஊழல் பட்டியலை அளித்து, அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. * தைத்திங்கள் முதல் நாள் தான், தமிழர் பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாள் என்று தமிழ்ப் பேரறிஞர்கள் முடிவு செய்ததை கலைஞரின் தலைமையிலான தி.மு.க. அரசு ஏற்று, 2008ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திங்கள் முதல் நாளை தங்கள் இல்லங்களில் தமிழ்ப் புத்தாண்டாகவும், பொங்கல் திருநாளாகவும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தி.மு.க. அரசின் இம்முடிவினை மாற்றி, எதிர்மறைச் செயல்களில் ஈடுபடும் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரத்து செய்துள்ளதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உணர்த்திட இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் இல்லந்தோறும் கொண்டாட வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியை வாழ்த்தும் சிறப்பு தீர்மானத்தை துரைமுருகன் வாசித்தார். மற்ற தீர்மானங்களை மு.க.ஸ்டாலின் வாசித்தார். மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், கே.என்.நேரு, பொன்முடி, விஜயன், முபாரக் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.