தியாகராஜர் ஆராதனை விழா : பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி 1000 கலைஞர்கள் இசை அஞ்சலி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இன்று நடந்தது. இதில் ஆயிரம் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டு தோறும் அவர் வாழ்ந்த திருவையாறில் ஆராதனை விழா நடைபெறும். இந்தாண்டு 168வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. கே.ஜே ஜேசுதாஸ், மகதி, நித்யஸ்ரீ மகாதேவன், சாக்சபோன் கத்ரி கோபால்நாத், மகாநதி ஷோபனா, டிஎம் கிருஷ்ணா உள்பட பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தினர்.விழா முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை இன்று காலை நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு காவிரி கரையோரம் உள்ள தியாகராஜர் சமாதியில் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அவர் வாழ்ந்த திருமஞ்சன வீதி இல்லத்தில் இருந்து அவரது சிலையுடன் உஞ்சவிருத்தி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக 8.30 மணி அளவில் விழா பந்தலை அடைந்தது. அப்போதும் அவரது சமாதியில் தீபாராதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு துவங்கி 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தது. சீர்காழி சிவ சிதம்பரம், சுதா ரகுநாதன், மகதி, ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், தஞ்சை மேயர் சாவித்ரி கோபால் உள்ளிட்ட சுமார் ஆயிரம் இசை கலைஞர்கள் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடினர். நிகழ்ச்சிகளை காண பல்லாயிரக்கணக்கான இசை பிரியர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் திரண்டிருந்தனர். பந்தல் நிரம்பி வழிந்தது.பஞ்சரத்ன கீர்த்தனை முடிந்ததும் நாதஸ்வர நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரம் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் வீதியுலா நடக்கிறது. 9.30 மணிக்கு சுதா ரகுநாதன் பாடுகிறார். அதைத்தொடர்ந்து நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆஞ்சநேய உற்சவத்துடன் ஆராதனை விழா நிறைவு பெறுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.