பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருங்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக பாதிக்கப்படும் ஏழை மக்களை சட்ட ரீதியாகப் பாதுகாக்கும் அரணாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் கேட்டுக் கொண்டார்.
சென்னையை அடுத்த சேலையூர் பாரத் சட்டக் கல்லூரி தொடக்க நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சேலையூர் பாரத் சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி தொடக்க நாள் விழாவில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குகிறார் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ். உடன், (இடமிருந்து) பாரத் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெ.ஹமீது உசேன், சட்டக் கல்லூரி முதல்வர் எஸ்.கஜேந்திர ராஜ், துணைவேந்தர் டாக்டர் வி.கனகசபை, நீதிபதி ஸ்ரீதர், பதிவாளர் எஸ்.பூமிநாதன், தேர்வு கண்காணிப்பாளர் பிரேம் ஜெயக்குமார்.
விழாவில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் சுதந்திரத்துக்காகப் போராடிய பல்வேறு தலைவர்கள், ஆரம்ப காலத்தில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி, சமூக பொதுநல அக்கறை காரணமாக அரசியலில் ஈடுபட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தனிமனித சுதந்திரம், உரிமை பிரச்னைகள் மட்டுமல்லாமல், ஒரு சமூகம், மாநிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்குச் சட்ட ரீதியான தீர்வு, பாதுகாப்பு, நீதியைப் பெற்றுத் தரும் தகுதியுடையவர்களாக உங்களை உயர்த்தும் சட்டக் கல்வி குறித்த அறிவாற்றலை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சட்டக் கல்வி பயின்று எதிர்காலத்தில் சிறந்த வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாகத் திகழப்போகும் நீங்கள் வழக்குரைஞர் தொழிலின் மதிப்பு,பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்றார் அவர்.
பாரத் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி. கனகசபை பேசியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 70 ஆயிரமாக இருந்த வழக்குரைஞர்களின் எண்ணிக்கை தற்போது 15 லட்சமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக வழக்குரைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்கள் பொதுநல நோக்குடன் செயல்படுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாட்டில் நிலவி வரும் ஊழல் லஞ்சம், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.