இணைந்தன அதிமுக அணிகள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை முறைப்படி ஒன்றாக இணைந்தன. இதற்கான அறிவிப்பை அதிமுக அம்மா அணியின் மூத்த நிர்வாகியும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகியும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிவித்தனர். இரு அணிகளும் இணைவது தொடர்பான புதிய ஏற்பாட்டின்படி தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி நீடிப்பார். துணைமுதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி வகிப்பார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும் ஆளுங்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சியையொட்டி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அதன் பின்னர் 2.45 மணி அளவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைக் கழக அலுவலகம் வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் அனைவரையும் அமைச்சர் டி.ஜெயகுமார் வரவேற்றார். அதிமுக பிளவுபட்ட பின்னர் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அவரையும், எடப்பாடி பழனிசாமியையும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பன்னீர்செல்வம் வருவதற்கு முன்னதாகவே அவரது ஆதரவாளர்களான மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், மூத்த தலைவர் சி.பொன்னையன், முன்னாள் எம்.பி.யான பி.எச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சித் தலைமையகத்துக்கு வந்திருந்தனர். பின்னர் இரு அணிகள் ஒன்றாக இணையும் நிகழ்ச்சி அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரான மதுசூதனன் முன்னிலையில் அரங்கேறியது. இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளான எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகளைக் குலுக்கி இரு அணிகளும் இணைந்ததை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினர். முன்னதாக ஜெயலலிதா மறைவை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர் செல்வம் போர்க்கொடி எழுப்பினார். தாம் முதல்வர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் விரும்பும் ஒருவரே ஆட்சியிலும் கட்சியிலும் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கட்சிப் பொருளாளர் பதவியிருந்து பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் எ திரொலியாக அதிமுக அதிருப்தி கோஷ்டியினர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை உருவாக்கினர். இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைசெல்ல வேண்டியிருந்ததால் சசிகலா, எடப்பாடி கே.பழனிசாமியைக் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அறிவித்ததைத் தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது. சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டன. ஆட்சியிலும் கட்சியிலும் தினகரனின் தலையீட்டை விரும்பாத எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த 10--ஆம் தேதி தினகரன் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தலைமையிலான அணிகளும் மீண்டும் ஒன்று சேருவதற்கான சூழ்நிலை உருவானது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.