SEETHAKADHI TRUST -33RD ANNUAL DAY

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

33 -ஆவது இலக்கிய பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் அ.மார்க்ஸக்கு பரிசுத் தொகை வழங்குகிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா.
மொழிக்கும், மொழி சார்ந்த சமூகத்துக்கும் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் பெருமை சேர்க்கின்றனர் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா கூறினார்.
சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலயம் சார்பில் 33 ஆவது ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா இஸ்லாமிய தமிழ் இலக்கிய பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் இலக்கிய பரிசுக்கு கவிக்கோ அப்துல் ரகுமானும், இரண்டாம் பரிசுக்கு எழுத்தாளர் அ.மார்க்ஸும் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் பரிசுக்கான ரூ 2 லட்சம் காசோலையை மறைந்த கவிக்கோ அப்துல்ரகுமானின் பேரன் டாக்டர் ஐ.அஜீமுக்கும், இரண்டாம் பரிசுக்கான ரூ 1 லட்சம் காசோலையை எழுத்தாளர் அ.மார்க்ஸுக்கும் வழங்கி, முன்னாள் நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா பேசியதாவது:
இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலையம் சார்பில், கடந்த 33 ஆண்டுகளாக வழங்கப்படும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பரிசளிப்பு மூலம் தமிழ்ப் புலமை, மத நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டணத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் பெருமகன் ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா பெயரில் கடந்த 33 ஆண்டுகளாக இலக்கியவாதிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் பரிசு வழங்கி, ஊக்குவித்து, கெளரவித்து வரும் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தின் தமிழ் இலக்கியச் சேவை பாராட்டுக்குரியது.
எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, மொழிக்கும், மொழி சார்ந்த சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கின்றனர். அவர்களைப் பெருமையோடு நினைவுகூர்வதைக் கடமையாகக் கருதி செயல்பட்டு வரும் இலக்கிய ஊக்குவிப்புப் பணி தொடர வேண்டும்.
எழுத்தும், இலக்கியமும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. கருத்துச் செறிவும், கற்பனை வளமும் நிறைந்த படைப்புகள் சமூகத்தின் அவலத்தை மனசாட்சியின் குரலாக எதிரொலிக்கும். பல படைப்புகள் காலத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. இலக்கிய படைப்புகளை மென்மேலும் வழங்கி, தமிழ் மொழிக்கும், சமூகத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளுக்கு உரிய மதிப்பு, மரியாதை அளித்து கெளரவிக்க வேண்டும் என்றார் அவர். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அக்பர் அலி, கே.எம்.பாட்சா, பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், பேராசிரியர் டி.எம்.அப்துல் காதர், சீதக்காதி அறக்கட்டளை அறங்காவலர் எம்.கே.சதக் அப்துல் காதிர், பொது மேலாளர் வி.என்.ஏ.ஜலால், தொகுப்பாளர் உமர் அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.