தமிழக அரசின் வனக் கொள்கை விரைவில் அறிவிப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வனங்களைப் பாதுகாக்கும் வகையில் மாநில வனக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவித்தார். சட்டப் பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்புகள்:-கோயம்புத்தூர் வனக் கோட்டத்தில் மனிதர்கள் மற்றும் யானைகளுக்கு இடையே மோதலைத் தவிர்க்கும் பொருட்டு, ரூ.1.28 கோடி செலவில் பயிர்களை சேதம் செய்யும் யானைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, தேனீ கூடுகள் மூலம் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வனங்களில் ஏற்படும் காட்டுத் தீ, மனித-வன உயிரின மோதல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வனத்துறையில் பணியிடங்களை மறுபகிர்வு செய்து மாநிலத்தில் இரண்டு இடங்களில் உயர்நிலைப் படைகள் அமைக்கப்படும். இந்தப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவும், கருவிகளுக்காகவும் ரூ.50 லட்சம் செலவிடப்படும். வனக் கொள்கை வடிவமைப்பு: தமிழகத்தின் வனங்கள், பண்பாடு மற்றும் சமயங்களின் அடையாளமாக உள்ளன. மக்களின் நல்வாழ்வினைக் காக்கும் வகையில், வனங்கள் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் மற்றும் தேசிய சொத்தாகக் கருதி நிலைத்த பயன்பாட்டுக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக தனித்த மாநில வனக்கொள்கை அறிவிக்கப்படும். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆர்கிட் மரச்செடி அரங்கம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளில் கம்பிக் கயிறு வேலை அமைக்கப்படும். இதன்மூலம், வனவிலங்குகள் வெளியே வருவது தடுக்கப்படும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக தனியார் மூலம் இயக்கப்பட்ட டீசல் படகுகள் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டன. எனவே, காரையாறு முதல் பானதீர்த்தம் வரை செல்வதற்கு சூரிய மின்சக்தி மூலம் படகு இயங்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கோடியக்கரை வனஉயிரின சரணாலயத்தில் நீர்மேலாண்மை யுக்தி மேம்படுத்தப்படும். கிண்டி சிறுவர் பூங்காவில் இப்போதுள்ள விலங்குக் கூடங்கள் புதுப்பிக்கப்படும். வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், அங்கு விலங்குகளை எரியூட்ட நவீன மின் எரியூட்டு வசதி ஏற்படுத்தப்படும். வண்டலூர் பூங்காவில் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அழிக்க அதற்கென தனி நிலையம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சீனிவாசன் அறிவித்தார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.