சென்னையில் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,பிப்;9- 2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தமிழ்நாட்டில் இந்த பணியில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 9000 பேர் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். இன்று முதல் 28-ந்தேதி வரை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். முழுமையான தகவல்களை பெறவேண்டும் என்பதற்காக 29 கேள்விகள் கேட்கப்படுகின்றன. நபரின் பெயர், குடும்பத்தலைவருக்கு உறவின் முறை, இனம், மதம், பிறந்ததேதி வயதுடன், தற்போதைய திருமண நிலை, திருமணத்தின்போது வயது, மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, அதிகபட்ச கல்வி நிலை, நபரின் தொழில். தொழில் வியாபாரம் அல்லது வேலையின் தன்மை, பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், வேலை தருபவரா? அல்லது வேலை செய்யத் தயாரா? உயிருடன் வாழும் குழந்தைகள், உயிருடன் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட 29 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றை முறையாக பூர்த்தி செய்யவேண்டும். உலக மக்கள்தொகையில் இந்தியா 2வது இடம் வகிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இக்கணக்கெடுப்பு அவசியம். சுதந்திரம் அடைவதற்கு முன், 1872ல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பின், 1951ம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பணி தொடர்ந்து நடக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் மக்கள்தொகை பதிவு கமிஷனர், இப்பணிகளை மேற்கொள்கிறார். மத்திய அரசு பணிகளில் மிகப்பெரிய பணியாக இது கருதப்படுகிறது. அடையாள அட்டை : இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள்தொகை, ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், வேலைக்கு செல்வோர், வேலையில்லாதோர், எழுத்தறிவு சதவீதம், மக்கள்தொகை வளர்ச்சி சதவீதம் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படுகிறது. கணக்கெடுப்பின் முடிவில் 15 வயது பூர்த்தியான ஒவ்வொருவருக்கும் 16 இலக்க எண்கள் கொண்ட \"தேசிய அடையாள அட்டை\' வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை சில மாதங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் தொடங்கி வைத்து அட்டைகளை வழங்கினார். அரசால் நியமிக்கப்பட்ட 27 லட்சம் களப்பணியாளர்கள் நாடு முழுவதும் இப்பணியை மேற்கொள்கின்றனர். இதை கண்காணிக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை தனி. 29 விதமான கேள்விகளுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் திரட்டப்படும் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.