அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்; களியக்காவிளையில் வைகோ பேச்சு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

களியக்காவிளை, பிப். 9- வரும் சட்டமன்ற பொதுத் தேர்வில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று களியக்காவிளையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். முஞ்சிறை ம.தி.மு.க. பிரமுகர் திருமண வழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குமரி மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான களியக்காவிளையில் ம.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விடக்கோரி கேரள அரசை வலியுறுத்தி ம.தி.மு.க. களியக்காவிளையில் போராட்டம் நடத்தியது. பல கோடி ரூபாய் செலவு செய்து காமராஜர் கொண்டு வந்த இத்திட்டத்தை கேரள அரசு கண்டு கொள்ளவில்லை. குமரி மாவட்டத்திற்கு நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசும் வலியுறுத்தவில்லை.முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற நதிகளில் இருந்தும் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. 5 மாவட்ட மக்கள் பயன் பெறும் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்கிறது. கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழகம் தவிப்புக்குள்ளாகி உள்ளது. ஈழத்தில் இன படுகொலை இதயத்தில் ரத்தம் என்ற குறுந்தகடை வெளியிட்டு உள்ளோம். இதனை இளைஞர்கள் பொதுமக்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம் போர்த்துக்கீசியம் என பல மொழிகளில் பிரதிகள் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஈழத்துக்கு சென்று வந்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டபோது இந்திய பிரதமரிடம் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினேன். இதன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி யார்-யாரிடம் சென்றது என்பதை கூற ராசா மறுப்பதால் அவருக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ. காவல் நீடித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நெஞ்சை பதற வைக்கும் படுகொலைகள் நடந்துள்ளன. உடமைகள் சொத்துகளுக்கு பாதுகாப்பு இல்லை. போலீசார் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை விரைவில் மாறும். அ.தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி வரும் சட்டசபை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். மீண்டும் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.