சிகிச்சை பெற்ற சிறுவன் இறந்ததால் தனியார் மருத்துவமனையை சூறையாடிய பொதுமக்கள்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

பெரம்பூர், பிப். 10- பந்தர்தோட்டம் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் இறந்த தகவலை அறிந்ததும் பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். டாக்டர்களின் அஜாக்கிரதையால் சிறுவன் உயிர் இழந்து விட்டதாக கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். பெரம்பூர் தி.தி. தோட்டம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி மஞ்சுளா. கட்டிட மேஸ்திரியாக இருந்த ஏழுமலை கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மஞ்சுளா தனது மகன் மோகனுடன் வசித்து வருகிறார். மோகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். மோகனுக்கு விரை வலி காரணமாக பந்தர்தோட்டம் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மஞ்சுளா அழைத்து சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் மருந்து மாத்திரைகள் வழங்கினார். ஆனாலும் வலி குறைய வில்லை. நேற்று பகல் 1 மணி அளவில் மஞ்சுளா மீண்டும் மோகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவனை பரிசோதித்த டாக்டர் விரையில் வீக்கம் இருப்பதால் உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆபரேசனுக்கு ரூ. 25 ஆயிரம் செலவாகும் என்றார். முன் பணமாக ரூ. 10 ஆயிரம் பணத்தை மஞ்சுளா கட்டினார். 3 மணியளவில் ஆபரேசன் தியேட்டருக்குள் அழைத்து சென்றனர். 4 மணிக்கு ஆபரேசன் வெற்றிகரமாக நடந்தது. பையன் நன்றாக இருக்கிறான் என்று கூறினார்கள். ஆனால் திடீரென்று 6 மணியளவில் மோகன் உடல்நிலை மோசமாகி விட்டதாக தெரிவித்தனர். இரவு 10.30 மணியளவில் மோகன் இறந்து விட்டதாக கூறினார்கள். அதை கேட்டதும் மஞ்சுளா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இந்த தகவலை அறிந்ததும் பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். டாக்டர்களின் அஜாக்கிரதையால் சிறுவன் உயிர் இழந்து விட்டதாக கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். பொதுமக்களின் ஆவேச தாக்குதலில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தியாகு, மோகன், நர்சு ஆவிஸ் ஆகியோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பொது மக்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் இறந்து போன மோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கணவனையும் இழந்து தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனையும் இழந்து தவிக்கும் மஞ்சுளா கண்ணீருடன் கூறியதாவது:- எனது மகனுக்கு விரை வீக்கம் இருப்பதாக கூறி மருந்து தந்தார்கள். அதில் வலி குறையவில்லை. நேற்று வீட்டில் இருந்து சாதாரணமாக நடந்துதான் வந்தான். டாக்டர் சிறிய ஆபரேசன்தான் பயப்பட தேவையில்லை என்று கூறி அட்மிட் பண்ணினார். ஆபரேசனுக்கு முன்பு எந்த சோதனையும் செய்யாமல் ஆபரேசன் செய்து என் மகனை அநியாயமாக கொன்று விட்டார்கள் என்றார். இதுபற்றி மஞ்சுளா செம்பியம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிகுமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்தது பற்றி மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:- இதுவரை இம் மருத்துவமனையில் 3 ஆயிரத்துக்கும் மேல் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 360 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 130 குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த புகாரும் வந்த தில்லை. தாய்-தந்தையரிடம் அனுமதி பெற்றுதான் அறுவை சிகிச்சை செய்வோம். அதே போல்தான் மஞ்சுளாவின் மகன் மோகனுக்கு நோய் தீர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பத்து நாட்களுக்கு முன்பே குழந்தைக்கு அடி வயிறு வலிக்கிறது என்று வந்தனர். குழந்தையின் விரை பிறவியிலேயே பைக்கு மேல் இருப்பதை கண்டு பிடித்தோம். தாமதம் செய்தால் புற்று நோயாக மாறும். உயிருக்கு ஆபத்து, உடனே ஆபரேசன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினோம். அவர்கள் பள்ளி விடுமுறையில் வருகிறோம் என்று கூறி விட்டு போய் விட்டனர். பிறகு வீக்கம், சீழ் என மோசமான கண்டிஷனோடு குழந்தையை அழைத்து வந்தார்கள். உடனே ஆபரேசன் செய்தோம். ஆபரேஷனுக்கு பிறகு குழந்தை நன்றாகத்தான் இருந்தது. ஆனால் 1 1/2 மணி நேரத்துக்கு பிறகு வலிப்பு ஏற்பட்டது. ஐ.சி.யில் வெண்டிலேட்டரில் வைத்தோம். அதற்குள் கூட்டமாக திரண்டு எங்களை கேரோ செய்து குழந்தையை கவனிக்க விடாமல் தடுத்தனர். ஆபரேஷன் ரிஸ்க் பற்றி முன்பே கூறி விட்டோம். ஆபரேஷன் முன்பே நடந்து இருந்தால் இதுபோன்ற ?ரிஸ்க்? நடந்து இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.