தேர்தல் தேதியை அவசரமாக நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?: தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கேள்வி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.3- ஏப்ரல் 13-ந் தேதியே ஓட்டுப்பதிவு என்று தேர்தல் தேதியை அவசரமாக நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? என்று தேர்தல் கமிஷனுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது! இன்னும் இரண்டு மாதங்களுக்கு நாம் ஒவ்வொருவரும் இடைவிடாமல் பணியாற்ற வேண்டிய காலம்! ஓய்வு கொள்ளாமல் உழைக்க வேண்டிய நேரம்! கடந்த ஐந்தாண்டு காலமாக கழக அரசு தமிழக மக்களுக்காக ஆற்றிய அளவற்ற அரும்பணிகள்- தமிழ்நாட்டு மக்களால் எந்த அளவுக்கு கருதப்படுகிறது, போற்றப்படுகிறது என்பதற்கான முடிவினைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்னும் இடையிலே 42 நாட்கள்தான் உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கப்போவதற்கு! வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 17 நாட்கள்தான்! அதற்குள் தோழமைக் கட்சிகளுக்குள் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும். பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் என்று பேசி முடிவெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சிகளின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை- வேட்பு மனு தாக்கல் செய்தவர்களையெல்லாம் ஒவ்வொரு கட்சியும் அழைத்துப் பேசி- முடிவு செய்து அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கை எழுதப்பட வேண்டும். வேட்பாளர்களாக கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்படுவோர், தங்களது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திட வேண்டும். அதன் பின்னர் வாக்காளப் பெருமக்களைச் சந்தித்து வாக்களிக்க வேண்டுமென்று தங்கள் தங்கள் தொகுதிகளில் கேட்டுக்கொள்ள வேண்டும். கட்சிகளின் தலைவர்களும், முக்கியப் பிரசாரகர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இதற்கெல்லாம் 17 நாட்கள்தான் உள்ளன. ஆனால் வாக்குகளை அளித்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட இடைவெளி! தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்படி! வாக்குகளை அளிக்க வேண்டிய நாள் ஏப்ரல் 13. அந்த வாக்குகளை எண்ணப்போகின்ற நாள் மே 13. ஒரு மாத கால இடைவெளி ஏன்? மேற்கு வங்கத்தில் ஆறு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகுதான் அந்த மாநிலத்திலே வாக்குகளை எண்ணும்போது இங்கேயும் எண்ணப்பட வேண்டுமாம்; அது தேர்தல் விதிமுறை. ஆனால் எதற்காக ஒரு மாத காலம் இடைவெளிவிட்டு, அவசர அவசரமாக ஏப்ரல் 13-ந் தேதியே அனைவரையும் சிரமத்திற்கு ஆளாக்கி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள். என்ன காரணமோ தெரியாது! தேர்தல் ஆணையம் மாநில அரசுகளை கலந்துகொண்டுதானே தேர்தல் தேதியை அறிவித்திருக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். அப்படி அல்ல! ஏனென்றால் தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டிற்கும் உரியதல்ல! சுதந்திரமான அமைப்பு. யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. தற்போது அறிவித்துள்ள முடிவின்படி தேர்தல் நடைபெறப்போகின்ற நாள் ஏப்ரல் 13. அதற்கு பின்னர் வாக்குகளை எண்ணப் போகின்ற நாள் மே 13. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டால், வாக்கு எண்ணிக்கை முடிய ஒருநாள் ஆகும். முடிவுகள் மே 14-ந் தேதி தான் தெரியும். ஆனால் தற்போதுள்ள சட்டமன்றம் முடிவுற்று, அடுத்த சட்டமன்றம் மே 17-ந் தேதியே தொடங்கப்பட வேண்டும். ஏனென்றால் தற்போதுள்ள சட்டமன்றத்தின் காலம் மே 16-ந் தேதியோடு முடிவடைகிறது. எனவே மே 17-ந் தேதிக்குள் தமிழகத்திலே ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். மே 14-ந் தேதியன்று யார் யார் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அறிவிக்கப்பட்டு- அதிலே எந்த கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது என்பது முடிவாகி, அந்த கட்சியின் சார்பிலே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, தங்கள் சட்டமன்ற கட்சி தலைவராக, அதாவது முதல்-அமைச்சராக ஒருவரை தேர்ந்தெடுத்து, அவர் ஆளுநரைச் சந்தித்து, ஆளுநரை அமைச்சரவை அமைக்கச் சொல்லிக்கேட்டு- அதன் பின்னர் அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு- அந்த அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையிலே பதவிப் பிரமாணம் செய்து கொண்டு- புதிய சட்டப்பேரவையை மே 17-ந் தேதிக்குள் கூட்டியாக வேண்டும். இதற்கெல்லாம் இருக்கின்ற நாட்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாட்கள் தான். அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது! தேர்தல் ஆணையம் இதனையெல்லாம் எண்ணிப்பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப்பார்த்து விட்டுத்தான் இந்த தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது. மே திங்கள் 17-ந் தேதியன்று தான் புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால், எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ந் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சிலநாட்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே மாதத்தில் முதல் வாரத்திலோ- அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? ஏப்ரல் மாதம் 13-ந் தேதியே அவசர அவசரமாக தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன? தேர்தல் ஆணையம் யாராலும் கேள்வி கேட்க முடியாத அமைப்பு என்றாலும்- சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் அல்லவா? தமிழகத்திலே மேலவையை புதிதாக அமைப்பது பற்றி தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு- ஆளுநரின் ஒப்புதலைப்பெற்று- மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பப்பட்டு- அங்கே நாடாளுமன்றத்திலும் அந்த தீர்மானம் நிறைவேறிய பிறகு தமிழகத்திலே மேலவைத் தேர்தலை நடத்துவதற்கான நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அந்த தேதி கால தாமதம் செய்யப்பட்டுக்கொண்டே போகிறது. மேலவை அமைப்பது பற்றிய ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்திலே நடக்கிறது. அந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரே தன்னிச்சையாக எழுந்து தமிழகத்திலே சட்டமன்ற மேலவை தேர்தல் நடத்துவதைப் பற்றி கேட்டு பேரவைத் தேர்தலுக்கு பிறகு நடத்தலாம் என்று நீதிபதி சொல்லக்கூடிய அளவிற்கு செய்திருக்கின்றார். தேர்தல் ஆணையம் அவ்வாறு அந்த வழக்கறிஞரை கேள்வி எழுப்பக் கூறியதா? தேர்தல் ஆணையம் முறைப்படித்தான் செயல்படும். அவர்களின் செயல்பாடுகள் குறித்து நாம் அய்யம் கொள்ளக்கூடாது. அவற்றில் தி.மு.க. இந்தமுறை போட்டியிடவுள்ள தொகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டு- அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்தவர்களை நேரில் சென்னைக்கு அழைத்து, அவர்களை நேர்காணல் பணியும் இரண்டொரு நாட்களில் தொடங்கப்படவுள்ளன. தி.மு.க. போட்டியிடவுள்ள தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன், அந்த தொகுதிகளைச் சார்ந்த நமது கழகத் தோழர்கள் நமது உதய சூரியன் சின்னத்தினை வரைந்திடும் பணியிலே ஈடுபட்டாக வேண்டும். அப்படி எழுதும்போது பொதுச் சுவர்களிலே விளம்பரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதையும் மனதிலே கொண்டு தவறாமல் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து நீ மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி அவ்வப்போது எழுதுகின்றேன். தேர்தல் பணி ஆற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக் காளைகளை, மகளிரையும் மிஞ்சுவதற்கு எங்கும் யாருமில்லை என்பதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் உன்னுடைய பணி அமைந்திட வேண்டும். அந்த காலத்திலேயே பெரியவர் பக்தவத்சலம் அவர்களால் \"சிங்கிள் டீயைக் குடித்து விட்டுக்கூட நாள் முழுவதும் சுற்றிச் சுற்றி பணியாற்றக் கூடியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்\'\' என்று பாராட்டைப் பெற்றவர்கள் நீங்கள். கழகத் தோழர்கள் வாக்குகளைக் கேட்டு வாக்காளர்களிடம் செல்வதற்கு தலை நிமிர்ந்து செல்லக் கூடிய அளவிற்கு நாம் ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிகளையெல்லாம் நிரல் படுத்திச் சொல்லி வாக்குகளைக் கேட்கலாம். ஐந்தாண்டு காலத்தில் நாம் எந்தத் தரப்பினரையும் மதிக்காமல் இருந்ததில்லை. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பேதம் பார்த்ததில்லை; வாக்களித்தோர் வாக்களிக்காதோர் என்று பிரித்துப் பார்த்ததில்லை. கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த ஒவ்வொரு நாளும், ஏன் ஒவ்வொரு நிமிடமும் இன்றையதினம் தமிழக மக்களுக்காக எந்த திட்டத்தை அறிவிக்கலாம், எந்த வகையிலே அவர்களின் இன்னலைப் போக்கலாம்; தமிழகத்தின் மேன்மைக்கும், சிறப்புக்கும் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து சாதனைகளைக் குவித்த ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி. அந்த ஆட்சிதான் தொடர வேண்டுமென்று முடிவெடுத்துள்ள வாக்காளர்களை அழைத்து வந்து, அவர்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டிய பணியினையாற்ற புறப்படு, புறப்படு- புறப்பட்டிருப்பாய் என்பதை நான் அறிவேன் என்றாலும் கேட்டுக்கொள்ள வேண்டிய கடமை என்னைச் சார்ந்ததல்லவா? இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.