ஸ்பெக்ட்ரம் முறைகேடு: நீரா ராடியாவுக்கு சம்மன்; ரூ. 66 ஆயிரம் கோடி இழப்பு-சி.பி.ஐ. புதிய அறிக்கையில் தகவல்

| [ திரும்பி செல்ல ]

ஸ்பெக்ட்ரம் முறைகேடு: நீரா ராடியாவுக்கு சம்மன்; ரூ. 66 ஆயிரம் கோடி இழப்பு-சி.பி.ஐ. புதிய அறிக்கையில் தகவல் புதுடெல்லி, மார்ச். 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற சில நிறுவனங்கள், பின்னர் அதை கொள்ளை லாபத்துக்காக மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்தன.தொலைத் தொடர்புத் துறையில் முன் அனுபவமே இல்லாத தகுதியற்ற நிறுவனங்கள் தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை அதிக அளவில் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதை சி.பி.ஐ. உறுதிபடுத்தி உள்ளது. அந்த நிறுவனங்களின் பட்டியலை சி.பி.ஐ. தொகுத்துள்ளது. அந்த பட்டியலை வைத்து அடுத்தக்கட்ட விசாரணையை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் பெற்றுக் கொடுத்தது யார்-யார் என்ற பட்டியலையும் சி.பி.ஐ. தொகுத்துள்ளது. அதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு வரும் நீரா ராடியாதான் முதல் இடத்தில் உள்ளார். டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற இவர்தான் இடைத்தரகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு தடவை விசாரணை நடத்தி உள்ளனர். அதன் மூலம் பல பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் யார், யாருக்கு கை மாறியது? எந்தெந்த நாட்டு வங்கிகளில் அந்த பணம் போடப்பட்டுள்ளது? என்பது போன்ற தகவல்களை கூட நீரா ராடியா கூறி இருப்பதாக தெரிகிறது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தினால் தகுதியற்ற நிறுவனங்கள் பற்றி கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று கருதுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கை மாறியதில் நீரா ராடியா முக்கிய பங்கு வகித்து இருப்பதால் அவரை அப்ரூவர் ஆக்கும் முயற்சியையும் சி.பி.ஐ. எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நீரா ராடியாவுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரித்து வரும் பாராளுமன்ற பொது கணக்குக் குழுவும் நீரா ராடியாவிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுப்பது பற்றி பலருடன் நீரா ராடியா தொலைபேசி யில் விவாதித்துள்ளார். இதுபற்றி அவரிடம் பொது கணக்கு குழுவினர் கேள்விகள் கேட்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அனுப்ப பொது கணக்கு குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீரா ராடியா தவிர மேலும் 2 பேருக்கு சம்மன் அனுப்ப பொது கணக்கு குழுவும், சி.பி.ஐ.யும் தயாராகி வருகின்றன. ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற வெளி நாட்டு நிறுவனங்கள் பற்றி சி.பி.ஐ.யின் ஒரு பிரிவு தகவல்கள் சேகரித்து வருகிறது. இதற்காக சைப்ரஸ், நார்வே நாடுகளுக்கு கடிதம் அனுப்ப சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 31-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. கடந்த 2009-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த போது ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் ரூ. 22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது ஸ்பெக்ட்ரம் இழப்பு ரூ. 66 ஆயிரம் கோடி வரை உள்ளதாக சி.பி.ஐ. தகவல்கள் சேகரித்துள்ளது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது ஸ்பெக்ட்ரம் இழப்பு ரூ. 66 ஆயிரம் கோடி என்று குறிப்பிட சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.