தேர்தல் நடத்தை விதி அமல்: புதிய ரேஷன் கார்டு ஓட்டுப்பதிவு முடிந்த பின் கொடுக்கப்படும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.5- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் பழைய குடும்ப அட்டையில் உள்ள பெயர்களை நீக்கி சான்று பெற்றுதான் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக திருமணமானவர்கள் பெற்றோர்களின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயர்களை நீக்கம் செய்து சான்று பெற்றுவர வேண்டும். அந்த சான்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் 3 மாதத்திற்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு கேட்டு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் வட்ட வழங்கல் அலுவலராலும், சென்னையில் உதவி ஆணையர் மூலமும் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி கடந்த 1-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புதிய ரேஷன்கார்டு வழங்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்த பிறகுதான் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று உணவு வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் உத்தரவால் வெளியூர்களுக்கு மாறுதலாகி செல்பவர்கள், புதிதாக திருமணம் செய்தவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஓட்டுப்பதிவு செய்வதற்கு ரேஷன்கார்டை பயன்படுத்த முடியாது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளைதான் பயன் படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. அப்படி இருக்கும் பட்டசத்தில் புதிய ரேஷன்கார்டு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? ஏற்கனவே உணவு வழங்கல் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் 2 மாதம் புதிய குடும்ப அட்டை வழங்க இயலாது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே அத்யாவசிய தேவையான ரேஷன் கார்டை தடையின்றி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.