மத்திய மந்திரிசபையில் இருந்து விலகல்: தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா தாமதம்: பிரதமருடன் சந்திப்பு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

புதுடெல்லி, மார்ச். 7- தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளி டையே பல்வேறு பிரச்சினைகளால் சுமூக உடன் பாடு ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைமை விதித்த நிபந்தனைகள் தி.மு.க. வினரை கடும் அதிருப்தி அடையச் செய்தது. காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த தி.மு.க. தலைவர்கள், மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுவில் முடிவு எடுத்து அறிவித்தனர். தி.மு.க. சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள 6 மந்திரிகளும் திங்கட்கிழமை பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வின் அதிரடி முடிவால் காங்கிரஸ் தலைவர்களிடம் மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் முதலில் சலனம் கூட ஏற்படவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தி.மு.க. விடம் தொடர்பு கொண்டு பேசாமல் இருந்தனர். இதனால் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி விரிசல் தொடர்பாக பரபரப்பான சூழ்நிலை நீடித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியும், தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் நேற்றிரவு சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அதன் பிறகு முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் நேற்றிரவு 10.30 மணிக்கு போனில் தொடர்பு கொள்ள பிரணாப் முகர்ஜி முயன்றார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து பிரணாப் முகர்ஜி போனில் டி.ஆர். பாலுவுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய மந்திரி சபையில் இருந்தும் தி.மு.க. விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டார். காங்கிரசுக்கு சற்று கால அவகாசம் தர வேண்டும் என்றும் டி.ஆர். பாலுவிடம் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகுவது என்ற முடிவு உயர்நிலை செயல் திட்டக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவாகும். தற்போதைய சூழ்நிலைகள் எல்லாவற்றையும் பரிசீலித்து, நீண்ட யோசனைக்குப்பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. உங்கள் கருத்தை எங்கள் கட்சித் தலைவரிடம் தெரிவிக்கிறேன் என்றார். இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மீண்டும் பேசி வருகிறது. இது தொடர்பாக எங்கள் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றார். இந்த நிலையில் இன்று (திங்கள்) காலை 6.40 மணிக்கு இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் மூலம் தி.மு.க. மந்திரிகள் மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், தயாநிதி மாறன் ஆகிய 4 பேரும் டெல்லி சென்றனர். மற்றொரு மந்திரி காந்தி செல்வன் கோவையில் இருந்து டெல்லி சென்றார். அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் டெல்லியில் உள்ளார். அவர்கள் 6 பேரும் 11 மணி அளவில் பாராளுமன்றத்துக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 மணிக்கு தி.மு.க. மந்திரிகளை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கவில்லை. தாமஸ் விவகாரம் பற்றி பாராளு மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருந்ததால் பிரதமர் தி.மு.க. மந்திரிகளை சந்திக்கவில்லை. இதனால் தி.மு.க. மந்திரிகள் 6 பேரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி அவர்களால் 11 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கொடுக்க இயல வில்லை. இந்த நிலையில் தி.மு.க. மந்திரிகள் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், தயாநிதி மாறன் ஆகியோர் பாராளுமன்ற அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது வெளியிடப்படவில்லை. இந்த சந்திப்பின் போது சோனியாவின் ஆலோசகர் அகமதுபடேல் மற்றும் குலாம்நபி ஆசாத் உடன் இருந்தனர். இதற்கிடையே தி.மு.க. மந்திரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள மு.க. அழகிரி வீட்டில் ஒன்று கூடினார்கள். அங்கு அவர்கள் பிரணாப் முகர்ஜியின் கடைசி கட்ட சமரச முயற்சி பற்றி விவாதித்தனர். காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள கோரிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. பிரதமரை சந்திக்க அனுமதி பெறுவது பற்றியும் பேசப்பட்டது. இதையடுத்து ராஜினாமா செய்வதை மாலை 6.30 மணி வரை ஒத்திவைக்க தி.மு.க. மந்திரிகள் முடிவு செய்தனர். தி.மு.க. மந்திரிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் மாலை 6.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே பிரதமரை மாலை 6.30 மணிக்கு தி.மு.க. மந்திரிகள் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தி.மு.க. வுடன் சமரசமாக செல்ல காங்கிரஸ் தலைவர்கள் பலர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் இடையே எந்த சுமூக உறவும் ஏற்பட வில்லை. தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக குலாம்நபி ஆசாத் கூறினார். அவர் மேலும் கூறுகையில் கூட்டணி உடையாது என்று நம்புவதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மதியம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதியுடன், மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலக கூடாது. எனவே உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உரிய முடிவு செய்து தெரிவிக்கிறேன் என்று கூறி உள்ளதாக தெரிகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் போனில் பேசிய பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். கருணாநிதியுடன் பேசிய விவரங்களை அவர் சோனியாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 60 தொகுதிகள் மட்டுமே தரும். அந்த 60 தொகுதிகள் எவை-எவை என்பதை தி.மு.க.வே முடிவு செய்து அறிவிக்கும். இதற்கு சம்மதித்தால் தி.மு.க. விலகாது என்று பிரணாப் முகர்ஜியிடம் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியதாக தெரிகிறது. இதை சோனியாவிடம் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். கருணாநிதி கூறி இருப்பது பற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா ஆலோசித்து வருகிறார். இன்று மாலை முதல்- அமைச்சர் கருணாநிதியுடன் மீண்டும் பேச உள்ளதாக மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். கருணாநிதி ஒதுக்கி கொடுக்கும் 60 இடங்களை காங்கிரஸ் மேலிடம் ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தி.மு.க.-காங்கிரஸ் இடையே மீண்டும் சமரசம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. காங்கிரசின் 7 ஆண்டு கூட்டணி தொடருமா? என்பது இன்று மாலை தெரிந்து விடும்.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.