சர்வதேச மகளிர் தினம்: ஜெயலலிதா-விஜயகாந்த் வாழ்த்து

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.7- 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா:- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தியாவை பொறுத்தவரையில், சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் கடினமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, தாங்க முடியாத வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களுக்கு கல்வி இன்னமும் மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உறுதிபடுத்தப்பட்டாலும், சமுதாயத்தில் உள்ள பாலின சமத்துவம் என்பது இன்னமும் கானல் நீராகவே உள்ளது. பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு நிதி சுதந்திரம் என்பது தெரியாத ஒன்றாக உள்ளது. இந்திய சமூகத்தில் குற்றம், இகழ்ச்சி, சித்திரவதை, அபகரிப்பு போன்ற கொடுமைகளினால் இன்றளவும் அதிக பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். எதிர் காலத்தில் பெண்மைக்கே கடும் அபாயத்தை விளை விக்கும் வகையில், பெண் கருகலைப்பு, பெண் சிசுவதை போன்ற கொடூரமான செயல்கள் இன்றளவும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிகழக்கூடிய அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.ஆனால், அனைத்தையும் இழந்துவிடவில்லை. கருத் தாழமிக்க, சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல தரப்பட்ட பெண்கள் அண்மையில் வகுத்த பாதைகள் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளன. பல நூற்றாண்டு காலமாக பாலின அடிப்படையில் சுமத்தப்பட்ட அடக்குமுறை, கொடுமை ஆகியவற்றை தகர்த்தெறிந்து புதிய பாதையில், முற்போக்கான சமூக-அரசியல் மற்றும் நிதி அதிகாரத்தை, உரிமையை பெறுவதற்கான புதிய கால கட்டத்தை எதிர்நோக்கி பெண்கள் செல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். பல்வேறுபட்ட தரப்பினர் அதிக கவனத்துடன் கேட்கும் அளவுக்கு இந்தியப் பெண்களின் குரல் உயர்ந்துள்ளது. பல்வேறு தொழில்களில் பெண்களின் பிரதிநிதித்துவம், பங்களிப்பு அதிகமாக காணப்படுகிறது. இன்று இந்தியப் பெண்கள் மாற்றத்தின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், பல நூற்றாண்டுகளாக திணிக்கப்பட்டுள்ள பாலினப் பாகுபாடு என்கிற அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து, விடுதலை மற்றும் அதிகாரமளிக்கக் கூடிய புதிய பாதையில் பெண்கள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று இந்தியப் பெண்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள்! நாம் அனைவரும் ஒருசேர இணைந்து முன்னேற்றப் பாதையில் அணிவகுத்து செல்வோம்! அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற நாம் போராடுவோம்! நம்மை நாமே வலுப்படுத்திக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு பெற நமக்கு நாமே பாடுபட்டு அதன் மூலம் வலுவான இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:- வாழ்வில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் பெண்கள் சிறந்த பகுதியினராக வருணிக்கப் படுகிறார்கள். தாயாகவும், தாரமாகவும், அக்காள்-தங்கையாகவும் இருந்து தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக இருந்து தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுகிறார்கள். மனித இனம் தொடர்வதற்கு தாய்மார்களே காரணம். அவர்களின் நலனை பேணுகிற வகையில் கொண்டாடப்படுவதே இன்றைய உலக மகளிர் தினமாகும்.ஆண்களுக்கும் பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருபாலரும் ஒரு சேர நண்பர்கள் போல இருக்க வேண்டும் என்பதே திருவள்ளூர் காட்டும் வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிற போது, வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். கைகோர்த்துக் கொண்டு பணியாற்றுவதினாலேயே திருமணங்களில் கூட, கைகோர்த்துக் கொண்டு சுற்றிவரச் சொல்கிறோம். இந்த உயரிய மரபுக்கேற்ப அரசியலிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமுதாய ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும். கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்றவற்றில் பெண்கள் இன்னும் சமநிலை அடைய வில்லை. சமஅந்தஸ்து, சம வாய்ப்பு, சமநீதி பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் அதிக அக்கறை செலுத்த இந்த மகளிர் தினம் பயன்படட்டும் என்று கூறி இந்த தினத்தில் மகளிர் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ, தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.