பள்ளி பள்ளித்துறை சார்பில் இந்த அரசு செய்த சாதனைகளின் தொகுப்பு; கருணாநிதி அறிக்கை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.10- பள்ளி பள்ளித்துறை சார்பில் இந்த அரசு செய்த சாதனைகளின் தொகுப்பு குறித்து முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. 2011-2012-ம் கல்வியாண்டில் சமச்சீர் கல்விமுறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப்பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டு, பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிகள் சட்டம் இயற்றப்பட்டு 7.12.2009 முதல் செயல்படுத்தப்பட்டது. இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் 2006-2007ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் ரூ.487.35 கோடி செலவில் 21,28,938 மாணவ-மாணவியர் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1,250, மாணவியருக்கு ரூ.1,500, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1,750, மாணவியருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.20.11 கோடி 1,24,702 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக் கல்வி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கட்டாயம் என சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஆண்டுக்கு ஏறத்தாழ 10 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். 2008-2009ம் கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய சிறப்பு கட்டணத்தை ரத்து செய்து ரூ.21.40 கோடியை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஏறத்தாழ 50 லட்சம் மாணவ, மாணவியர் இதனால் பயனடைகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகள் பள்ளியில் இருந்து நின்று விடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 16 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத மாணவியர்கள் பெயரில் தலா ரூ.3,000 வீதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வைப்பீடு செய்யப்படும். இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள 150 மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், வேலைவாய்ப்பு பெறவும் \"ஸீரோ\'\' லெவல் தேர்வுகள் தமிழக அரசுத் தேர்வுத்துறையின் உதவியுடன் நடத்தப்பட்டன. காமராஜர் பிறந்த நாளை \"கல்வி வளர்ச்சி நாள்\'\' எனக் கொண்டாட வேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றி, அதைக் கொண்டாடும் வகையில், 2007-08 முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜர் புகழ் போற்றப்படுவதுடன், கல்வி விழிப்புணர்வும் மக்களிடையே வளர்க்கப்படுகின்றன. 2006-07ம் ஆண்டு முதல் சத்துணவுடன் வாரம் 2 முட்டைகள்; 2007-2008 முதல் வாரத்திற்கு 3 முட்டைகள்; 2008-09ம் ஆண்டு முதல் முட்டை உண்ணாத மாணவர்களுக்கு வாழைப் பழங்கள்; 2009-2010ம் ஆண்டு முதல் வாரம் ஐந்து முட்டைகள் வீதம் வழங்கப்படுகின்றன. சொந்த நிதி மூலம் அரசு பள்ளி கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க முன்வரும் நன்கொடையாளர்கள் அவர்கள் விரும்பும் பெயரை அந்த கட்டிடத்தில் பொறித்திட அனுமதித்து 1998-ம் ஆண்டில் அன்றைய கழக அரசு பிறப்பித்த ஆணையை முந்தைய அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது. அரசுப் பள்ளிகளுக்கு நிலமாகவோ, நிதியாகவோ கட்டிடம் கட்டிக்கொடுத்தல் மூலமாகவோ நன்கொடை வழங்கும் நன்கொடையாளர் விரும்பும் பெயரினை அப்பள்ளிக் கட்டிடத்தில் பொறித்துக்கொள்ள இந்த அரசு ஆணை பிறப்பித்தது. இதுவரை ரூ.3.80 கோடி செலவில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் 76 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன. ரூ.1.56 கோடி செலவில் 1500 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் கணினி மையங்களை மொழி ஆய்வகங்களாக மாற்றி மாணவ, மாணவியரின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திட எல்காட் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் நலன் காத்திட அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டு 2646 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு 236 பேருக்கு ரூ.3.38 லட்சம் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் அமைந்துள்ள 147 சமத்துவபுரங்களில் நூலகச்சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை, கோட்டூர்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டு, 15.9.2010 அன்று திறக்கப்பட்டது. இந்நூலகம் 12 லட்சம் நூல்கள் இடம்பெறத் தேவையான இடவசதியும், 1200 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கத்தக்க வகையில் இருக்கை வசதியும், பசுமைக் கட்டிடத்திற்கு உரிய அமைப்புகள் கொண்டதாகவும், உணவகம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கும் விடுதி வசதியுடனும், 1280 பேர் அமரும் வசதி கொண்ட அதிநவீன கலையரங்கம் மற்றும் 850 பேர் அமரும் வகையில் திறந்த வெளி அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடனும் 3,75,770 சதுர அடி பரப்பளவில் 8 மாடிகள் கொண்டதாகும். சர்வதேசத் தரத்தில் அமைந்துள்ள இந்நூலகம் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையிலும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது. இந்நூலகம் ரூ.172 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் ரூ.60 கோடி செலவில் புத்தகங்கள், மின் இதழ்கள், மின் புத்தகங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகளின் தொகுப்பு இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.