இருதய அறுவை சிகிச்சையில் புதிய தொழில் நுட்பம்; சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,மார்ச்;10- ரத்தக்குழாய் வீக்கத்தை போக்க செயற்கை குழாய் போன்ற \"எவிடா கிராப்ட்\" ஆந்திர வாலிபருக்கு பொருத்தி சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். உடல் முழுவதும் செயல்படும் பெருந்தமனி எனும் பெரிய ரத்தக்குழாயில் இருதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய் பெரிதாக வீங்கி பலூன் போலாகிவிடும். இது உடைந்தால் உயிருக்கு ஆபத்து. இந்த வீக்கம் மூளையில் மற்றும் உடலின் எந்த பகுதியிலும் வரலாம். இதை ஆங்கிலத்தில் \"அனூரிசம்\" என்பர். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், கொழுப்பு பொருட்களை அதிகம் உட்கொள்பவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், மற்றும் உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது. பிறப்பிலேயே இருதய கோளாறு உள்ளவர்களுக்கும் \"அனூரிசம்\" ஏற்படும். இப்படி ரத்தக்குழாய் வீங்கினால் இருதய அறுவை சிகிச்சை செய்து வீங்கிய இடத்தில் மாற்று செயற்கை குழாய் பொருத்தப்பட்டு ஒட்டுபோடப்படும். மியாட் மருத்துவமனையில் இந்த முறையில் கடந்த வருடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆந்திர வாலிபர் ரமேஷ்பாபுவிற்கு ஒட்டு போட்ட இடம் தவிர்த்து மற்ற இடத்தில் இரத்த கசிவு ஏற்பட்டதில் முதுகுவலி ஏற்பட்டு அவர் மியாட்டிற்கு வந்தார். அவருக்கு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.வி. பாஷி தலைமையில் உடனடியாக நவீன இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு இருதயம் மற்றும் நுரையீரல் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டு, ரத்தம் 20 டிகிரி அளவில் குளிரூட்டப்பட்டது. கம்ப்யூட்டர் உதவியால் மின்னணு திரையில் பார்த்துக்கொண்டே அறுவை சிகிச்சை நடந்தது. பாதிக்கப்பட்ட பெருந்தமனியின் உட்புறத்தில் முழுவதும் \'எவிடா கிராப்ட்\' செயற்கை குழாய் பொருத்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இது முழு பாதுகாப்பானது. ஐரோப்பாவில் கடந்த மூன்று வருடங்களாக இந்த தொழில் நுட்பம் இருந்து வந்தாலும் இந்தியாவில் முதன் முதலில் இந்த நோயாளிக்கு நமது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 100பேருக்கு தான் இந்த நவீன முறை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. 6-மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் இருதய - நுரையீரல் இயந்திர இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரமேஷ் பாபு இப்போது நன்றாக இருக்கிறார். நவீன் ஒட்டு சாதனம் இல்லாவிட்டால் இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். இந்த நவீன ஒட்டு சாதனத்தால் ஒரே முறை அறுவை சிகிச்சையில் பாதிப்பு சரி செய்யப்பட்டது. இந்த விவரங்களை மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.வி. பாஷி, டாக்டர் முரளி ஆகியோர் தெரிவித்தனர். அப்போது மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரமேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.