மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை: தமிழக அரசு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.11- தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நுழைவுத் தேர்வு இன்றி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள செய்தி: இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கழகம் எடுத்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 18.2.2011-ல் விசாரணைக்கு வந்தபோது பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமான அறிவிக்கைக்கு எந்த ஒப்புதலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசின் வக்கீல் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு ஏற்கவே ஒப்புதல் அளித்ததாக மருத்துவக் கழக வக்கீல் கூறினார். இதையடுத்து முரண்பாடான கருத்தைக் கொண்டிருப்பதால் இரு தரப்பினரும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு 7.3.2011 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி மத்திய அரசின் முன் அனுமதியுடன் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மருத்துவக் கழகத்தின் வக்கீல் கூறி உள்ளார். தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைக்கு தடையாணை பெற்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலும் தமிழக அரசு தன்னை ஒரு வாதியாக சேர்த்துள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மாநாட்டிலும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டது. பொது நுழைவுத் தேர்வு குறித்து மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று 13.1.2011 அன்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் கொள்கைப்படி எம்பிபிஎஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஏதும் இன்றி இப்போதுள்ள நிலையிலேயே இவ்வாண்டும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.