ஜப்பானில் சுனாமி தாக்குதல்: ராமேஸ்வரம்-கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது-சுற்றுலா பயணிகள் மிரண்டனர்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 12- ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுனாமி பேரலைகள் தோன்றி ஜப்பானில் பல நகரங்களை உருக்குலைத்தன. இந்த பூகம்பத்தால் 19 நாடுகளுக்கு சுனாமி ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டன. இந்த பட்டியலில் இந்தியா இடம்பெற வில்லை. இருப்பினும் தமிழக கடலோர பகுதிகளில் பீதி ஏற்பட்டது. டி.விக்களில் நிலமைகளை கவனித்து கொண்டிருந்தனர்.திடீரென்று பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. நீர்மட்டம் மிகவும் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மாலை 4 மணி வரை விவேகானந்தர் சிலைக்கு மட்டும் படகு போக்குவரத்து நடந்தது. எனினும் ஜப்பானில் சுனாமி தாக்குதல் தகவல் கிடைத்ததால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் லாட்ஜூகளில் முடங்கினர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் ராமேஸ்வரத்தில் பாம்பன் வடக்கு கடல் பகுதியிலும் கடல் உள்வாங்கியது. சிறிது தூரத்துக்கு மணல் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தது. இதனால் கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்தில் திரண்டு இருந்த சுற்றுலா பயணிகள் மிரண்டனர். பலர் கடற்கரையில் இருந்து வெளியேறினார்கள். இன்று காலையில் ராமேஸ்வரம் கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக அலைகள் இல்லாமல் அமைதியாக காட்சி அளித்தது. இதற்கான காரணம் புரியாமல் மீனவர்கள் தவித்தனர். மீனவர்கள் சிலர் கூறும் போது, கடல் அமைதியாக இருப்பது நல்லதல்ல என்றனர்.முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல்பகுதி இன்று வினோதமாக காட்சியளித்தது. அரபிக்கடல் பகுதியும், இந்திய பெருங்கடல் பகுதியும் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்தப் பகுதியில் சுமார் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. வங்காளவிரிகுடா கடல் பகுதி வழக்கத்தை விட அமைதியாக அலைகள் எழும்பாமல் குளம்போல் காட்சி அளித்தது. இந்த வித்தியாசமான காட்சியை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்பட்டனர். இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் சிலைக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடந்தது. எனினும் கூட்டம் குறைவாக இருந்தது. கடலில் நிகழ்ந்த மாற்றங்களை மீனவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் வழக்கம்போல கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், குளச்சல், இரையுமன்துறை உள்பட மற்ற கடற்பகுதிகளில் கடலில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. இதனால் மீனவர்களுக்கு வழக்கம் போல மீன் பிடிக்கச் சென்றனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.