துப்பாக்கியுடன் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிய போலீசார்; லிபியாவிலிருந்து திரும்பிய வாலிபர்கள் பேட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

உளுந்தூர்பேட்டை, மார்ச்.12 உளுந்தூர்பேட்டை தாலுக்கா சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (30), முருகன் (28), ஆறுமுகம் (24) சிவக்குமார் (27), குமரவேல் (24), சுந்தரமூர்த்தி (32), சலீம்கான் (28), கார்த்தி (27), நந்தகோபால் (27) ஆகிய 9 பேர் லிபியா நாட்டுக்கு கம்பி கட்டும் வேலைக்காக கடந்த 3மாதங்களுக்கு முன்பு சென்றனர். தற்போது அந்த நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக அவர்கள் அங்குள்ள ஒரு அறையில் 20நாட்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களை இந்திய அரசு மீட்டு சொந்தஊருக்கு அழைத்து வரவேண்டுமென விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களின் கோரிக்கைகை ஏற்று இந்திய அரசின் முயற்சியால் சிறப்பு விமானம் மூலம் ராஜேந்திரன், முருகன், ஆறுமுகம், சிவக்குமார், குமரவேல், சுந்தரமூர்த்தி ஆகிய 6 பேர் கடந்த 9-ந் தேதி டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் டெல்லியில் இருந்து இவர்கள் 6 பேரும் சொந்த ஊரான சேந்தமங்கலம் கிராமத்திற்கு வந்தனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் இங்கிருந்து தலா ஒருலட்சம் ரூபாய் செலவு செய்து லிபியா சென்றோம். நாங்கள் சபா மாவட்டம் புராக் என்ற ஊரில் தங்கி ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தோம். கலவரத்தின் காரணமாக எங்களை அந்த நிறுவனத்தினர் வெளியே செல்ல விடவில்லை.மேலும் தொடர்ந்து பல நாட்கள் ஆகியும் நாங்கள் வேலை செய்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது அவர்கள் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு காரில் வந்த போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் எங்களை துப்பாக்கியுடன் காரில் விரட்டினார்கள். அதன்பின் உயிருக்கு போராடி அங்கிருந்த தப்பித்து நாங்கள் தங்கியிருந்த அறையை அடைந்தோம். அந்த அறையில் நாங்கள் வைத்திருந்த உணவு பொருட்களை கொண்டு நாங்களே சமைத்து ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். இரவு நேரங்களில் திடீர், திடீர் என வெடிகுண்டு சத்தம் கேட்கும். நள்ளிரவு நேரங்களிலும் நாங்கள் கண் விழித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தோம். அனைத்து தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டால் யாரிடமும் பேசமுடியவில்லை. அதன்பின் இந்திய அரசின் முயற்சியால் நாங்கள் சிறப்பு விமானம் மூலம் ஊருக்கு வந்தோம். நாங்கள் லிபியா செல்ல செலவழித்த தொகை ரூபாய் 1லட்சமும், மாதம் ரூ.12ஆயிரம் வீதம் 3மாத சம்பளமும் எங்களுக்கு கிடைக்கவில்லை இதை எங்களுக்கு இந்திய அரசு பெற்றுகொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.