மயிலாப்பூர் இன்ஸ்பெக்டரின் சாவுக்கு காரணமான 3 அதிகாரிகள்; போலீஸ் ஏட்டும் சிக்குகிறார்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.13- மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ராஜசேகரின் தற்கொலைக்கு பின்னணியில் 3 அதிகாரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்த ராஜசேகர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக ராஜசேகர் எழுதிய 3 கடிதங்கள் சிக்கியது. தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், மனைவி, குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் உருக்கமாக எழுதி இருந்தார். இன்னொரு கடிதத்தில், உயர் அதிகாரிகளின் தொந்தரவு குறித்து இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விரிவாக குறிப்பிட்டிருந்தார். சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணை நடத்த உள்ளனர். இதுதொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- மயிலாப்பூர் போலீசாரின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படும் என்றார். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார். இதன்பிறகு இன்ஸ்பெக்டர் அல்லது டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுவார். பிறகு இன்ஸ்பெக்டர் தற்கொலை தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்தப்படும். இன்ஸ்பெக்டர் ராஜசேகரின் தற்கொலைக்கு பின்னணியில் 3 போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஏட்டு ஒருவரும் இருப்பது அம்பலமாகியுள்ளது. இவர்கள் 4 பேரின் பெயர்களும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரின் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. மயிலாப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2 ரவுடிகள் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு பின்னணியில் நடைபெற்ற திரை மறைவு சம்பவங்களும் அப்போது ஏற்பட்ட மனக் கசப்புகளும் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தற்கொலை செயலுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. இரட்டைக் கொலை நடைபெற்ற அன்றுதான் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் பணியில் சேர்ந்தார். கொலை நடந்த மறுநாளே குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, இன்ஸ்பெக்டர் ராஜசேகர் பல்வேறு அவமானங்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டைக் கொலையில் தொடர்புடைய ஒருவரைக் காப்பாற்றவும் முயற்சிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜ சேகருக்கும் உயர் அதிகாரி ஒருவருக்கும் கடுமையான போராட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மிகவும் கடுமையான வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் ராஜசேகரை திட்டி தீர்த்ததாகவும் பரபரப்பானக் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. சட்டம் -ஒழுங்கு பணிக்கு நீயெல்லாம் ஏன் வந்தாய். பேசாமல் சமையல் வேலைக்கு செல்ல வேண்டியதுதானே என்று அந்த உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரைப் பார்த்து திட்டியுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். எனவே 3 போலீஸ் அதிகாரிகள் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.