தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடம்; கருணாநிதி முன்னிலையில் உடன்பாடு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச். 13- தமிழ்நாட்டில் உள்ள நாடார் அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து \"பெருந்தலைவர் மக்கள் கட்சி\'\' என்னும் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன், சென்னை வாழ்நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் தங்கமுத்து, நாடார் இளைஞர் பேரவை தலைவர் ராஜ்குமார், நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் த.பத்மநாபன் செங்குன்றம் வட்டார நாடார் இளைஞரணி ஆலோசகர் நாகராஜன் ஆகியோர் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். பேச்சுவார்த்தையின் போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 1 தொகுதி வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர்.தனபாலனும் கையெழுத்திட்டனர் இதுகுறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2011-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழக தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அதன் அமைப்பாளர் என்.ஆர்.தனபாலன் நாடார் அவர்களுக்கும் இன்று (13-ந்தேதி) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுவதென்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:- பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 3500 நாடார் சங்கங்கள் மற்றும் மிக முக்கிய சங்கங்களான மதுரை நாடார் மகாஜன சங்கம், நெல்லை தட்சிணமாற நாடார் சங்கம், நெல்லை- தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்டதுதான் பெருந்தலைவர் மக்கள் கட்சி. வெற்றிக்கு பாடுபடுவோம் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் நாடார், சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்வோம். தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். 6-வது முறையாக முதல்-அமைச்சர் கருணா நிதி மீண்டும் முதல்வராக ஆவார். எங்கள் கட்சியின் சார்பாக நான் (என்.ஆர்.தனபாலன்) போட்டியிடுகிறேன். தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவேன். கொங்குமண்டலம், மற்றும் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த நாடார்களுக்கு 2 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.