சாதிப் பாட்சாவின் மரணம் CBI விசாரிக்கும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை,மார்ச்;17- சென்னையில் நேற்று தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிப் பாட்சாவின் மரணம் குறித்த விசாரணைப் பொறுப்பு CBI டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவின் நண்பரான சாதிக் பாட்சா, கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் எனும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக புலனாய்வு செய்துவரும் CBI ம், அது தொடர்பாக நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரித்துவரும் அமலாக்க இயக்ககமும் ஆ.இராசாவின் இல்லத்திலும், அலுவலகத்திலும் சோதனை நடத்திய அதே நாட்களில் சாதிக் பாட்சாவின் நிறுவனத்திலும் சோதனை நடத்தின. இரண்டு முறை இந்த சோதனைகள் நடந்தது மட்டுமின்றி, CBI யால் இரண்டு முறை அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் சாதிக் பாட்சா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற ஸ்வான் டெலகாம் அதன் பங்குகளை விற்ற ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளில் இயங்கிவரும் எடிசலாட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர் சாதிக் பாட்சா என்று கூறப்பட்டதுடன், கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனம் வழியாகவே பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணைக்கு டெல்லிக்கு வருமாறு CBI டம் இருந்து வந்த அழைப்பையடுத்து நேற்று மதியம் டெல்லி புறப்பட்ட விமான டிக்கட் வாங்கியிருந்த சாதிக் பாட்சா, தனது இல்லத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட சாதிக் பாட்சாவின் உடல் இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று பிரேத சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில், சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு CBI யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனர் லத்திகா சரண் கூறியுள்ளார். இதே அறிவிப்பை தமிழக அரசின் முதன்மை செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.