ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை; சாதிக்பாட்சா மூச்சு திணறி இறந்தார்: டாக்டர் பேட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.17- ராயப்பேட்டை மருத்துவமனையில் சாதிக்பாட்சா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சென்னை தொழில் அதிபர் சாதிக்பாட்சா நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி ரேகானா பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்து வரச்சென்ற சமயத்தில் சாதிக்பாட்சா படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை டிரைவருடன் சேர்ந்து மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சாதிக்பாட்சா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாதிக்பாட்சாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது உடலை போலீசார் வெள்ளைத் துணியால் போர்த்தி இருந்தனர். பத்திரிகையாளர்கள் போட்டோ எடுப்பதற்காக முகத்தை திறந்து காட்டும்படி கூறினார்கள். ஆனால் போலீசார் முகத்தை காட்ட மறுத்து விட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தான் உடலை இதுபோன்று போர்த்துவார்கள். அதற்கு முன்பே வெள்ளைத் துணியால் மறைத்து எங்களுக்கு முகத்தை காட்ட மறுப்பது ஏன்? காயங்கள் இருந்ததா? என்று போலீசாரிடம் கேட்டு பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் முகத்தை காட்டாமலேயே போலீசார் சாதிக்பாட்சாவின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விட்டனர். உறவினர்கள் யாரும் உடன் செல்லவில்லை. சாதிக்பாட்சாவின் மனைவி ரேகானா, அவரது தாயார் மற்றும் உறவினர்களை காரில் ஏற்றி எல்லையம்மன் காலனியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரேகானா முன்னிலையில் வீட்டை திறந்த போலீசார் உள்ளே சென்று தடயங்களை பதிவு செய்தனர். பின்னர் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி அதன் விவரங்களை பதிவு செய்து கொண்டனர். இதற்கு மாலை 6 மணி வரை ஆகிவிட்டது. அதற்குமேல் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்பதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே சாதிக்பாட்சா உடல் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 9.50 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. டாக்டர் டெக்கால் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனையை நடத்தினார்கள். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டது. மருத்துவமனை முன் சாதிக் பாட்சாவின் உறவினர்கள் கூடியிருந்தனர். அங்கு மைலாப்பூர் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். உளவு பிரிவு போலீசாரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் கண் காணித்தப்படி இருந்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் சாதிக்பாட்சாவின் அண்ணன் ஜமால் முகமது, தம்பி ஜாபர்அலி ஆகியோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதை 8-க்கும் மேற்பட்ட வடஇந்திய டெலி விஷன்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்தவண்ணம் இருந்தன. ஏராளமான பத்திரிகை நிருபர்களும் கூடியிருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை பெரம்பலூரில் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்து வெளியில் வந்த டாக்டர் டெக்கால் நிருபர்களிடம் கூறியதாவது:- சாதிக்பாட்சா உடலில் எந்தவித காயமும் இல்லை. கழுத்து இறுக்கப்பட்ட அடையாளம் மட்டுமே உள்ளது. அவர் மூச்சு திணறி இறந்தது மட்டுமே உறுதியாகி உள்ளது. அவர் தூக்கில் தொங்கினாரா? என்பது கழுத்து பகுதி சதையை ஆய்வு செய்த பின்னரே தெரிய வரும். ரசாயன பரிசோதனைக்காக கழுத்து சதை பகுதி அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு டாக்டர் டெக்கால் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.