சாதிக் பாட்ஷா சாகும் முன் காரில் வந்து மிரட்டியது யார்? சி.பி.ஐ. விசாரணை

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சாதிக் பாட்ஷா சாகும் முன் காரில் வந்து மிரட்டியது யார்? சி.பி.ஐ. விசாரணை சென்னை,மார்ச்;17- ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய சாதிக் பாட்ஷா தற்கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதிக் பாட்ஷா இறந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மாலையே சென்னையில் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தினார்கள். தேனாம்பேட்டை போலீசார் சாதிக் பாட்ஷா வின் மனைவி மற்றும் உறவி னர்கள், நண்பர்களிடம் நடத்திய விசாரணை, பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் ஆகியவற்றை முழு விவரங்களுடன் 2 நாளில் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். தற்போது சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டதாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்று விசாரிக்கிறார்கள். நேற்று காலை சாதிக் பாட்ஷா வீட்டில் இருந்த போது காரில் வந்த சிலர் அவரை வெளியே அழைத்துச்சென்றுள்ளனர். திரும்பி வரும் போது முகம் வாடிய நிலையில் சாதிக் பாட்ஷா காணப்பட்டார். அதன் பிறகுதான் அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு காரில் வந்தவர்கள் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியிருக்கலாம். இதனால் பயந்து போய் தற்கொலை முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக சாதிக் பாட்ஷாவை டெல்லிக்கு அழைத்து இருந்தனர். இதற்காக அவர் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் அதற்கு முன்பே அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே காரில் வந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டியது யார்? எதற்காக மிரட்டினார்கள் என்று விசாரிக்கிறார்கள். சாதிக் பாட்ஷா பயன்படுத்திய செல்போன் போலீசில் சிக்கியுள்ளது. அதில் அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதன் மூலம் சாதிக் பாட்ஷாவுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். சாதிக் பாட்ஷா சாகும் முன் எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு சில வரிகளே வெளியிடப்பட்டுள்ளன.முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. இந்த கடித விவரங்களை போலீசார் முழு அளவில் விசாரணை நடத்தி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். சாதிக் பாட்ஷா இறந்த விவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டிய நெருக்கடியில் சி.பி.ஐ. உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் முழுவிவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.