தமிழகத்தில் `தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்\': வேட்புமனு தாக்கல் செய்தபின் மு.க.ஸ்டாலின் பேட்டி

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச்.22- தி.மு.க. கூட்டணி சார்பில், சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் இந்த முறை கொளத்தூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12.25 மணிக்கு, அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். சரியாக மதியம் 12.30 மணிக்கு, தேர்தல் அதிகாரி எம்.ராஜரத்தினத்திடம் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். போட்டியிடுவதற்கான டெப்பாசிட் தொகையை அப்போது அளித்த அவர், தேர்தல் நடத்தை உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார். அவருடன், தி.மு.க. வடசென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளர் கபிலன், முன்னாள் எம்.பி. கே.சண்முக சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், மு.க.செல்வம், மேயர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன், மகளிரணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, பா.ம.க. வடசென்னை மாவட்ட செயலாளர் பி.கே.சேகர், தி.மு.க. வக்கீல் அணி துணை தலைவர் கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன் உள்பட பலர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வேட்புமனு தாக்கல் செய்தபின் வெளியே வந்த துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- தி.மு.க. கூட்டணியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக கொளத்தூர் தொகுதிக்கு நான் நிறுத்தப்பட்டுள்ளேன். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் 6-வது முறையாக தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- கொளத்தூர் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட காரணம் என்ன? பதில்:- தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் நான் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் விரும்பினார்கள். தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்டளையிட்டனர். அந்த கட்டளையை ஏற்று இங்கு போட்டியிடுகிறேன் கேள்வி:- கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?. பதில்:- வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கேள்வி:- தற்போது வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது? பதில்:- 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே, இந்த தேர்தல் அறிக்கையில் கூறியதையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?. பதில்:- எதிரணியில் ஏற்பட்டுள்ள கூட்டணி சிக்கலை களைவது அவர்களது வேலை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.