தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு; ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

சென்னை, மார்ச் 30- தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு 45 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 45 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த 6 சதவீத அகவிலைப்படி உயர்வு தங்களுக்கு கிடைக்காது என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கருதினார்கள். அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்ற அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த உத்தரவில் தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 45 சதவீத அகவிலைப்படி 1.1.2011 முதல் 51 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை மார்ச் 31-ந் தேதிக்குப் பிறகு வழங்கப்படும். இந்த உத்தரவு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மக்கள் நல பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். மேலும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதுதவிர, ரூ.600-க்கு குறைவாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு மாதம் ரூ.20-ம் ரூ.600-க்கு மேல் பெறுவோருக்கு மாதம் ரூ.40-ம் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் 13 லட்சம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். குறைந்தபட்சம் ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் வரை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கு அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் நன்றி தெரிவித்துள்ளன.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.