சினிமா கதாநாயகன் வி.காந்த் அரசியலில் வில்லனாகி இப்போது காமெடியனாகிவிட்டார் ; ஸ்டாலின் பேச்சு

| [ திரும்பி செல்ல ]

கல்கி இணையதளம்

வேலூர்,ஏப்:9- வேலூர் பழைய பஸ்நிலையம், சேண்பாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் சி.ஞானசேகரன், அமைச்சர் துரைமுருகனை ஆதரித்து பேசியதாவது: வருகிற 13ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு உங்களை நாடி, தேடி வந்திருக்கிறோம். வாக்கு கேட்க வந்திருக்கிறோம். சில கட்சிகள் உள்ளன. ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தலுக்குத்தான் வருவார். அதுவும் தனி விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ வந்து வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு செல்வார். வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவேன் என்றெல்லாம் வாக்குறுதி தருவார். தேர்தல் வந்தால்தான் அவருக்கு தமிழ்நாடு. இல்லையென்றால் கோடநாடு. அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு இப்போது ஒரு ஜோடி இந்த தேர்தல் மூலம் கிடைத்துள்ளார். அது யார் என்று உங்களுக்குத் தெரியும். சினிமாவில் கதாநாயகனாக இருந்து அரசியலில் வில்லனாகி இப்போது காமெடியனாக வந்து கொண்டிருக்கிறார். முதல்நாள் வேட்பாளருக்கு அடி, அடுத்த நாள் கொடி, அதற்கு பிறகு குடி. ஆஃப் அடிச்சு ஆப்பு வைப்பேன் என்று அரசியலை அசிங்கப்படுத்தி, கொச்சைப்படுத்தி தமிழக பண்பாட்டை கெடுக்கும் வகையில் அரசியல் நடத்துகிறார். அதற்கு பதிலடி கொடுப்பது தான் 13ம் தேதி தேர்தல். முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். வேலூரின் நீண்டகால குடிநீர் பிரச்னையை போக்க 1295 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு நானே அடிக்கல் நாட்டி உள்ளேன். முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகால ஆட்சியில் தேர்தலின்போது கொடுத்த உறுதிமொழி அனைத்தையும் நிறைவேற்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மேலும் பல சாதனை திட்டங்களை செயல்படுத்தவும், ஏற்கனவே தொடங்கிய திட்டங்கள் தொடரவும் ஆதரவு தாருங்கள். உங்களில் ஒருவனாக, முதல்வரின் மகனாக உங்களைக் கேட்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் வேலூர் மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அரக்கோணத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவு திரட்டினார். திருப்பத்தூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.
வீடியோ பதிவு ஏதும் இல்லை


முந்தைய செய்திகள்

கருத்தை பதிவு செய்ய :

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2012 www.kalkiwebtv.com. All rights reserved.